2015-04-10 15:13:00

இரக்கத்தின் புனித ஆண்டு அறிவிப்பு ஆணை அறிக்கை


ஏப்.10,2015. "நற்செய்தி நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு வழங்க முடியும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தியாக இவ்வெள்ளியன்று ஒன்பது மொழிகளில் வெளியானது.

மேலும், இறைஇரக்கத்தின் ஞாயிறின் திருவிழிப்பான ஏப்ரல் 11, இச்சனிக்கிழமை மாலை பாப்பிறையின் அதிகாரப்பூர்வ ‘ஆணை அறிக்கையை’ (Bull of Indiction) வாசித்து இரக்கத்தின் புனித சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூபிலி ஆண்டு காலங்களில் அறியப்பட்ட இந்த ஆணை அறிக்கையை, இச்சனிக்கிழமை மாலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய புனிதக் கதவின் முன் நின்று வாசிப்பார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருவழிபாட்டின்போது இந்த ஆணை அறிக்கையின் நகல்களை, அனைத்துலகையும் குறிக்கும் விதமாக, திருஅவையின் ஆறு பிரதிநிதிகளுக்கு வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரிலுள்ள நான்கு பாப்பிறைப் பசிலிக்காக்களின் தலைவர்கள், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Ouellet, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Filoni, கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் Sandri ஆகியோருக்கு வழங்குவார் திருத்தந்தை.

அத்துடன், அனைத்து கீழை நாடுகளின் பிரதிநிதியாக, நற்செய்தி அறிவிப்புப் பேராயச் செயலர் பேராயர் Savio Hon Tai-Fai, ஆப்ரிக்கக் கண்டத்தின் பிரதிநிதியாக திருப்பீட கலாச்சார அவைச் செயலர் ஆயர் Barthélemy Adoukonou, கீழை வழிபாட்டுமுறைத் திருஅவைகளின் பிரதிநிதியாக, அலெக்சாந்திரிய காப்டிக் முதுபெரும் தந்தை அலுவலகத்தின் பேரருள்திரு Khaled Ayad Bishay ஆகியோருக்கும் இந்த ஆணை அறிக்கையின் நகல்களை வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவடைந்த ஐம்பதாம் ஆண்டு நிறைவு  நாளான வருகிற டிசம்பர் 8ம் தேதி இந்தச் சிறப்பு புனித ஆண்டு தொடங்கும். மேலும், கடந்த மார்ச் 13ம் தேதி நடைபெற்ற பாவமன்னிப்பு திருவழிபாட்டின்போது இந்தப் புனித ஆண்டை அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.