2015-04-10 15:49:00

இந்தியா-பள்ளிக்குச் செல்லும் சிறாரின் எண்ணிக்கை அதிகரிப்பு


ஏப்.10,2015. இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் சிறாரின் எண்ணிக்கையில் கணிசமான முன்னேற்றம் காணப்படுவதாகவும், இரண்டாயிரமாம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பள்ளிக்குச் செல்லாத சிறாரின் எண்ணிக்கை 90 விழுக்காடு குறைந்துவிட்டதாகவும் யுனெஸ்கோ அறிக்கை தெரிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளி, மதிய உணவுத் திட்டம் போன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

அதேநேரம், இந்தியாவில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடும் சிறாரின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்திய நடுவணரசால் முன்னெடுக்கப்பட்ட, அனைவருக்கும் கல்வி போன்ற திட்டங்கள் காரணமாக பள்ளிகள் பல திறக்கப்பட்டதும், கல்வி பெற்றால் வாழ்வில் முன்னேறலாம் என்ற எண்ணம் சமூகத்தில் ஆழமாகப் பரவியதும், பள்ளிச் சேர்க்கை உயர்ந்துள்ளதற்கு முக்கியக் காரணங்கள் என்று கூறப்படுகின்றது.

இந்தியாவின் தென் மாநிலங்களோடு ஒப்பிடுகையில், வட இந்திய மாநிலங்கள் ஆரம்பக் கல்வியில் பின்தங்கியுள்ளன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.