2015-04-09 16:13:00

தீவிரவாதம் பாகிஸ்தானை உருக்குலைக்கிறது - லாகூர் பேராயர்


ஏப்.09,2015. கோவில், மசூதி, பள்ளி, அரசு அலுவலகம் என்ற எவ்வித வேறுபாடும் இன்றி, தீவிரவாதம் அனைத்தையும் உருக்குலைத்து, பாகிஸ்தானை அச்சத்தில் ஆழ்த்துகிறது என்று லாகூர் பேராயர் செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் Youhanabad பகுதியில் உள்ள புனித யோவான் கத்தோலிக்கக் கோவிலில் நடைபெற்ற தற்கொலைப் படையின் குண்டுவெடிப்பால், 22 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 70 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தாக்குதல்களை மையப்படுத்தி, உயிர்ப்புத் திருநாளையடுத்து, புனித யோவான் கத்தோலிக்கக் கோவிலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மறையுரை வழங்கிய பேராயர் ஷா அவர்கள், நாட்டின் அமைதிக்காக செபிக்கும்படி விண்ணப்பித்தார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஏனைய கிறிஸ்தவ சபையினர், நல்மனம் கொண்ட இஸ்லாமியர் என்று அனைவரும் இணைந்து உதவிகள் செய்ததற்காக புனித யோவான் கோவில் பங்கு அருள் பணியாளர், பிரான்சிஸ் குல்சார் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.