2015-04-09 15:50:00

திருத்தந்தை பிரான்சிஸ் நம்பிக்கைக்குரியவர்


ஏப்.09,2015. பிலிப்பின்ஸ் மக்களைப் பொருத்தவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு திருத்தந்தை என்பது இப்புதனன்று தெரிய வந்துள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டில் இயங்கிவரும் சமுதாய வானிலை நிலையம் (Social Weather Stations - SWS) என்ற கருத்துக்கணிப்பு மையம் நடத்திய ஒரு வாக்கெடுப்பில், பிலிப்பின்ஸ் மக்களில் 87 விழுக்காட்டினர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் என்று கூறியுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சனவரி மாதம் பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, அங்கு வீசிய புயலையும் பொருட்படுத்தாது, Tacloban நகருக்கு சனவரி 17ம் தேதி மேற்கொண்ட பயணம், மக்கள் மனதில் ஆழப்பதிந்தது என்று இக்கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டில், மத நல்லுணர்வு உருவாகவும், நீதியும் அமைதியும் வளரவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறிய செய்திகள், மக்களை பெரிதும் கவர்ந்தன என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

1995ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களைக் குறித்தும், 2005ம் ஆண்டு, திருத்தந்தை பெனடிக்ட் அவர்களைக் குறித்தும் கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், இவ்விரு கருத்துக்கணிப்புக்களைக் காட்டிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெற்றுள்ள நம்பிக்கை வாக்கு அதிக விழுக்காடு என்றும் சமுதாய வானிலை நிலையம் கூறியுள்ளது.

ஆதாரம் : UCAN    / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.