2015-04-09 15:27:00

ஆர்மேனியக் கத்தோலிக்க ஆயர்களைச் சந்தித்த திருத்தந்தை


ஏப்.09,2015. இறைவனின் கருணை, நம் மத்தியில் நிலவும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து, நாடுகளிடையே ஒப்புரவையும் அமைதியையும் கொணர இறையருளை மன்றாடுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஆர்மேனியாவில் 1915ம் ஆண்டு இனப்படுகொலைகள் நடைபெற்றதன் முதல் நூற்றாண்டு நினைவாக, இறை இரக்கத்தின் ஞாயிறான ஏப்ரல் 12ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தவிருக்கும் திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருக்கும் ஆர்மேனியக் கத்தோலிக்க ஆயர்களை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தபோது, திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

கடந்த ஈராயிரம் ஆண்டுகள் ஆன்மீகத்திலும் கலாச்சாரத்திலும் திளைத்து வளர்ந்துள்ள ஆர்மேனியா, 301ம் ஆண்டு முதல் கிறிஸ்தவத்தைத் தழுவியுள்ளது, வரலாற்று உண்மை என்பதை திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆழ்ந்த இருளிலிருந்து வெளியாகும் சக்திகள் மனித மனதில் தோன்றுகின்றன என்பதை விவிலியம் கூறியுள்ளது என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமை சூழும் நேரங்களில் மீட்பின் சக்தியும் தோன்றுகிறது என்பதை நமது நம்பிக்கை எடுத்துரைக்கிறது என்று கூறினார்.

கிறிஸ்துவின் பாடுகளை, ஆர்மேனிய மக்கள் இன்னும் தொடர்கின்றனர் என்பது, அந்நாட்டு வரலாற்றில் காணப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை, மக்களின் நம்பிக்கையை உயிர்ப்பு நோக்கித் திருப்புவது ஆயர்கள் என்ற முறையில், நமது கடமை என்று வலியுறுத்தினார்.

ஆர்மீனிய இனப்படுகொலைகளைத் தடுக்க, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், கீழை வழிபாட்டு முறை பேராயத்தை அவர் தோற்றுவித்ததையும் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Narek நகர புனித கிரகோரி அவர்கள், திருஅவையின் மறைவல்லுனராக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

1915ம் ஆண்டு, ஏப்ரல் 24ம் தேதி, ஓட்டோமான் பேரரசின் ஆணையால் ஆரம்பமான இனப்படுகொலையில், 15 இலட்சம் ஆர்மேனியர்கள் கொலையுண்டனர். இதுவே 20ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை என்று நினைவுகூரப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.