2015-04-09 16:07:00

Garissa பல்கலைக் கழக கொடுமை குறித்து கென்யா ஆயர்கள்


ஏப்.09,2015. கென்யா நாட்டு இளையோர் பலர், தவறான முறையில் வழிநடத்தப்பட்டு, அடிப்படைவாதக் கொள்கைகளில் தங்களையே ஈடுபடுத்திக் கொள்வதும், தீவிரவாதச் செயல்பாடுகளால் தங்கள் உடன்பிறப்புக்களைக் கொல்வதும் ஆழ்ந்த வருத்தத்தைத் தருகின்றன என்று கென்யா ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஏப்ரல் 2, புனித வியாழனன்று, Garissa பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த கொடூரத் தாக்குதல்களில், 147 பேர் கொல்லப்பட்டதைக் குறித்து, ஏப்ரல் 8, இப்புதனன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கென்யா ஆயர்கள், நாட்டின் ஒற்றுமையைக் காப்பது அனைவரின் கடமை என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இறந்தோரின் குடும்பங்களுக்குத் தங்கள் செபங்கள் தொடரும் என்று கூறியுள்ள ஆயர்கள், இந்தத் துயரமான நிகழ்வின்போது, மனிதாபிமான உணர்வோடு செயல்பட்ட அனைவருக்கும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

உயிர்ப்புப் பெருவிழாவன்று, நைரோபி, திருக்குடும்ப பசிலிக்காவில் திருப்பலியாற்றிய கென்யா ஆயர் பேரவையின் தலைவரும், நைரோபி பேராயருமான கர்தினால் John Njue அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த அனுதாபச் செய்தியை வாசித்தார் என்று CNS செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.