2015-04-08 16:06:00

திருத்தந்தையின் மறைக்கல்வி – இறைவனின் உன்னத கொடை, குழந்தைகள்


ஏப்ரல் 08,2015. கடந்த சில வாரங்களாக, தன் மறைக்கல்வி உரையில், குடும்பம் என்ற தலைப்பில், அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் முக்கியத்துவம், மற்றும் பங்களிப்பு குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரம் புனித வாரமாக இருந்ததால் அப்புதனன்று புனித வார கொண்டாட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இவ்வாரம், மீண்டும், குடும்பத்தின் ஓர் அங்கமான குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

மனித குலத்தின்மீது இறைவன் பொழிந்துள்ள மிகப்பெரும் உன்னதக் கொடை குழந்தைகளாகும். இன்றைய உலகில் எண்ணற்ற குழந்தைகள் அனுபவிக்கும் துன்பம் குறித்து உங்களோடு என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். தாங்கள் பிறந்த நொடியிலிருந்தே சில குழந்தைகள், ஒதுக்கப்படுதல், கைவிடப்படுதல், மற்றும், அவர்களின் குழந்தைப் பருவமும் வருங்காலமும் திருடப்படுதல் ஆகிய கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். குழந்தைகளின் பலவீன நிலைகளையும், பசி மற்றும் ஏழ்மையால் அவர்கள் துன்புறுவதையும் காணும்போது, இக்குழந்தைகள் இவ்வுலகில் பிறந்தது தவறு என்று உரைப்பவர்களும் உள்ளனர். குழந்தைகள் பிறப்பு ஒரு நாளும் தவறானதாக இருக்க முடியாது. அவர்கள் படும் துன்பங்களைக் காணும்போது, அவர்களை நாம் அன்புகூர்வதற்கு அதனை மேலும் ஒரு காரணமாக நோக்க வேண்டும். தெருக்களில் பிச்சையெடுக்கும் ஒவ்வொரு குழந்தையும், கல்வியும் மருத்துவ உதவிகளும் மறுக்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், இறைவனை நோக்கி எழுப்பப்படும் அழுகுரலாகும். பலவேளைகளில் இக்குழந்தைகள் குற்றக்கும்பல்களுக்கு இரையாகின்றனர். இக்குற்றக்கும்பல்கள் இவர்களை வியாபரப்பொருளாக பயன்படுத்தி வன்முறைக்கு உள்ளாக்கி சுரண்டுகின்றனர். பணக்கார நாடுகளில் கூட, குடும்ப நெருக்கடிகளாலும் வாழ்வு நிலைகளாலும் குழந்தைகள் துன்பங்களை அனுபவிக்கின்றனர். பலவேளைகளில் இவை மனிதாபிமானமற்றவைகளாக உள்ளன. இத்தகைய ஒவ்வொரு சூழலிலும் மனதளவிலும் உடலளவிலும் குழந்தைப்பருவ உரிமைகள் மீறப்படுகின்றன. குழந்தைகளை தன்னிடம் கொண்டுவந்த பெற்றோரையும் அக்குழந்தைகளையும் இயேசு எவ்வாறு நடத்தினார் என நோக்குவோம். 'சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது' (மத். 19:14) என்றார் இயேசு. இந்தப் பெற்றோர் கொண்டிருந்த நம்பிக்கையும், இயேசுவின் பதிலுரையும் எத்தனை அழகானது. தங்கள் குழந்தைகளுக்காக தினமும் தியாகங்களை ஆற்றும் அசாதாரண பெற்றோர் பலர் உள்ளனர். திருஅவையானது தன் தாய்மைக்குரிய அக்கறையை அனைத்து குழந்தைகள்மீதும் அவர்களின் குடும்பங்கள் மீதும் காட்டி, அவர்களுக்கு இயேசுவின் அருளைக் கொணர்கிறது. நாம் எப்போதும் செலவுகளை கணக்கில் கொள்ளாது, நம் குழந்தைகளை மிகுந்த அக்கறையுடன் பராமரிப்போம், அப்படி நாம் பராமரிக்கும்போது, அவர்கள் வேண்டப்படாதவர்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு தோன்றாததோடு, அவர்களின் எல்லையற்ற மதிப்பு குறித்தும் அவர்கள் உணர்ந்திருப்பர். இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.