2015-04-08 16:52:00

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டையொட்டி, கருத்தரங்கு


ஏப்,08,2015. தற்போது நடைபெற்றுவரும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டையொட்டி, உரோம் நகரில் ஏப்ரல் 7, இச்செவ்வாய் மாலை, ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு ஆரம்பமானது.

அர்ப்பண வாழ்வை மேற்கொள்வோரைப் பயிற்றுவிக்கும் வழிகாட்டிகள் 1200க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் இந்தக் கருத்தரங்கு, செவ்வாய் மாலை, புனித ஏழாம் கிரகோரி ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியோடு துவங்கியது.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு அமைப்புக்களின் பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz அவர்கள் ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், இளையோரை, இன்றைய உலகிற்குத் தகுந்த வகையில் உருவாக்கும் வழிகள் விவாதிக்கப்படும் என்று இப்பேராயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.

"கடந்த காலத்தை நன்றியோடு காணுதல், தற்காலத்தை ஆர்வமாக வாழ்தல், எதிர்காலத்தை நம்பிக்கையோடு அரவணைத்தல்" என்ற தலைப்பில், கர்தினால் Braz de Aviz அவர்கள், தலைமை உரையை, இப்புதனன்று வழங்கினார்.

அர்ப்பண வாழ்வை மேற்கொள்வோரைப் பயிற்றுவிக்கும் வழிகாட்டிகள் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கு, ஏப்ரல் 11, இச்சனிக்கிழமை நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.