2015-04-08 16:47:00

அரசுத் தலைவர் ஒபாமா வழங்கிய உயிர்ப்புப் பெருவிழா விருந்து


ஏப்,08,2015. தன் பாடுகளின்போது கிறிஸ்து அனுபவித்த ஆழ்ந்த இருளை நாம் புரிந்துகொள்வதன் வழியாக, இறைவனின் ஒளியை நாம் பெறமுடியும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் கூறினார்.

உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, வெள்ளை மாளிகையில் அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள் வழங்கிய காலை விருந்தில் இவ்வாறு கூறினார்.

அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள் வழங்கிய உரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றுக்களையும், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் கூற்றுக்களையும் மேற்கோள்களாகக் கூறினார் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

நடைபெறும் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாஷிங்டன் நகருக்கு வருகை தருவது குறித்துப் பேசிய அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள், சமுதாயத்தின் விளிம்பில் வாழும் மக்களைத் தேடிச் செல்லுதல், அமைதியைத் தேடுதல் ஆகிய எண்ணங்கள் திருத்தந்தையின் மனதிற்கு நெருக்கமான கருத்துக்கள் என்று குறிப்பிட்டார்.

உயிர்ப்பு விழா காலை விருந்தில் பேசிய துணை அரசுத் தலைவரும், கத்தோலிக்கருமான ஜோ பைடன் (Joe Biden) அவர்கள், நமது நம்பிக்கையையும், நன்னெறி விழுமியங்களையும் நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வதே நாம் அவர்களுக்கு வழங்கக்கூடிய பெரும் பரிசு என்று குறிப்பிட்டார். 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.