2015-04-07 14:52:00

கடுகு சிறுத்தாலும் - "இவ்வுலகம் எப்படிப்பட்டது?"


இந்து மதப் பாரம்பரியத்தில் சொல்லப்படும் ஒரு கதை இது:

கடவுளும், மனிதனும் ஒரு நாள் நடந்து சென்றபோது, மனிதன் கடவுளிடம், "இந்த உலகம் எப்படிப்பட்டது?" என்று கேட்டார். கடவுள் அவரிடம், "நான் சொல்கிறேன். ஆனால், இப்போது என் தொண்டை மிகவும் வறண்டு போயுள்ளது. நான் குடிப்பதற்கு ஒரு குவளை குளிர்ந்த நீர் தந்தால், இவ்வுலகம் எப்படிப்பட்டது என்று சொல்கிறேன்" என்று சொன்னார். அம்மனிதர் உடனே, அருகிலிருந்த ஒரு வீட்டுக்குச் சென்று, கதவைத் தட்டினார். உள்ளிருந்து ஓர் அழகியப் பெண் வெளியே வந்தார். அவரிடம் அம்மனிதர், ஒரு குவளை தண்ணீர் கேட்டார். அந்தப் பெண் மறுமொழியாக, "நான் தண்ணீர் தருவதைப் பற்றி ஒன்றும் தடையில்லை. ஆனால், வீட்டில் மதிய உணவு தயாராக உள்ளது. நீங்கள் உள்ளே வந்து உணவருந்திவிட்டு, பின்னர் தண்ணீர் பெற்றுச் செல்லலாமே" என்று கூறினார். அந்த மனிதரும் வீட்டிற்குள் சென்றார்.

முப்பது ஆண்டுகள் உருண்டோடின. அம்மனிதர், அந்த இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, அந்நகரில் செல்வம் மிகுந்த ஒரு வர்த்தகராக மாறினார். அவர்கள் இருவருக்கும் அழகான ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஒருநாள், அவ்வூரில் வீசிய சூறாவளியில், அம்மனிதர் தங்கியிருந்த வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. உடனே அவர், "கடவுளே, என்னைக் காப்பாற்று!" என்று குரல் எழுப்பினார். சூறாவளியின் நடுவிலிருந்து, "உன்னைக் காப்பாற்றுகிறேன். ஆனால், நான் கேட்ட குளிர்ந்த நீர் எங்கே?" என்று கடவுளின் குரல் ஒலித்தது.

கடவுளின் தாகத்தைத் தணிக்கப் புறப்பட்ட பலர், தங்கள் தாகத்தை மட்டுமே தணித்துக்கொண்டது, இவ்வுலகம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.