2015-04-06 15:33:00

மத்தியதரைக் கடல் பிளாஸ்டிக் குப்பைக்கூடமாக மாறும் அபாயம்


ஏப்.06,2015. மத்தியதரைக் கடலில் பெருமளவான பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன என்று இஸ்பானிய அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்தியதரைக்கடலின் மேற்பரப்பில், பைகள், பாட்டில்கள், பொருள்களைச் சுற்றி வைக்கும் பிளாஸ்டிக் தாள்கள் போன்றவற்றின் பாகங்கள் என ஏறக்குறைய ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் மிதப்பதாக இஸ்பானிய அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வு கூறுகிறது.

மத்தியதரைக்கடலில் வாழ்கின்ற மீன்கள், பறவைகள், ஆமைகள் மற்றும் திமிங்கிலங்களின் வயிற்றிலிருந்தும் பிளாஸ்டிக் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அவ்வாய்வு, குறிப்பாக, வட ஐரோப்பிய கரையோரங்களில் வளர்ந்த சிப்பி வகை உயிரினங்களின் வயிற்றிலும் மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

மத்தியதரைக் கடல் பகுதி, உலகப் பெருங்கடல் பகுதியில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான பகுதியாக இருந்தபோதிலும், இப்பகுதி பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு முக்கியமானது என்று கூறப்படுகிறது.

மத்திய தரைக்கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவை ஐந்து மில்லிமீட்டருக்கும் சிறிய அளவிலானவை என சுட்டிக்காட்டியுள்ள இந்த ஆய்வறிக்கை, இந்தப் பகுதியில்  குவிந்திருக்கும் இவ்வளவு பெரிய பரப்பளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடல், வட மற்றும் தென் அட்லான்டிக் கடல், வட மற்றும் தென் பசிபிக் கடல், ஆகியவற்றிற்கு இடையே தொடர்ந்து இடம்பெறும் கடல் நீரோட்ட சுழற்சியில் எந்த அளவுக்கு இந்த பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்திருக்கிறதோ அதற்குச் சமமான அளவுக்கு மத்திய தரைக் கடலிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. 

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.