2015-04-06 15:21:00

நேபாளம்-புதிய அரசியல் அமைப்புக்காக கத்தோலிக்கர் செபம்


ஏப்.06,2015. நேபாளத்தில் புதிய சமயச் சார்பற்ற அரசியல் அமைப்பை எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு இறைவன் ஞானத்தை வழங்குமாறு அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் கடந்த வாரப் புனித நாள்களில் சிறப்பாகச் செபித்தனர்.

இது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Paul Simick அவர்கள், நேபாளத்தில் புதிய சமயச் சார்பற்ற அரசியல் அமைப்பை எழுதிக் கொண்டிருக்கும் தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகளால் ஒரு தீர்வு காண்பதற்கு இன்னல்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறினார்.

சட்ட அமைப்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடந்த காலத் தவறுகளை இறைவன் மன்னித்து, இந்தப் புதிய சமயச் சார்பற்ற அரசியல் அமைப்பை எழுதுவதற்கு இறைவன் ஞானத்தை அருளுமாறு இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவில் கத்தோலிக்கர் செபித்தனர் என்று கூறினார் ஆயர் Paul Simick.

240 ஆண்டுகளாக இந்து அரச நாடாக இருந்த நேபாளம், 2007ம் ஆண்டில் புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுத்தது. இந்த அமைப்பு 2010ம் ஆண்டுக்குள் புதிய சமயச் சார்பற்ற அரசியல் அமைப்பை கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் அது இன்னும் முடிக்கப்படவில்லை.

நேபாள மக்கள்தொகையில் ஏறக்குறைய 0.5 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.    

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.