2015-04-05 09:38:00

திருத்தந்தையின் பாஸ்கா இரவு திருப்பலி மறையுரை


ஏப்.,05,2015. சனிக்கிழமையன்று, இயேசுவின் உயிர்ப்புத் திருவிழாவுக்கு முந்தைய இரவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் தூய பேதுரு பேராலயத்தில் திருவிழிப்பு வழிபாட்டுச் சடங்குகளுடன் நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரையின் சுருக்கத்தை இதோ தருகிறோம்:

‘இது இயேசுவின் உயிர்ப்புக்கு முந்தைய திருவிழிப்பின் இரவு. கடவுள் தூங்கவில்லை. அவர் தம் மக்களை மீட்கும்பொருட்டு அவர்கள்மீது தன் பார்வையை செலுத்துகிறார். தம் அன்பின் வல்லமையால் அவர் தம் மக்களை செங்கடலைக் கடந்து அழைத்து வருகிறார். இயேசுவின் சீடர்களுக்கு இது, அச்சம் மற்றும் வருத்தம் நிறைந்த திருவிழிப்பு இரவு. அதிகாலையில் பெண்கள் எழுந்து கல்லறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு கல் புரட்டப்பட்டிருப்பதையும், உள்ளே வெண்ணிற ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் அமர்ந்திருப்பதையும் கண்டனர். கல்லறைக்குள் நுழைந்த அந்த பெண்களைப்போல் நாமும் கடவுளின் மறையுண்மைக்குள் நுழையவேண்டும். இறைவன் தன் அன்பின் வழி வெற்றிகண்ட இந்த மறையுண்மைக்குள் நுழையாமல் நம்மால் இயேசுவின் உயிர்ப்பை வாழ முடியாது. இந்த மறையுண்மைக்குள் நுழையவேண்டுமெனில், மௌனத்திற்கு குரல் கொடுக்கவும், உண்மை நிலைகள் குறித்து அச்சம் கொள்ளாமலிருக்கவும், நம் சுயநலன்களைவிட்டு வெளியே வரவும், பணிவும் தாழ்ச்சியும் உள்ளவர்களாக மாறவும்  நாம் முன்வரவேண்டும். இதையெல்லாம் இயேசுவின் சீடர்களாக இருந்த அந்த பெண்கள் நமக்குக் கற்றுத் தருகின்றனர். அவர்கள் அன்னைமரியுடன் இணைந்து இரவு முழுவதும் கண்விழித்திருந்தனர். அவர்களின் விசுவாசமும் நம்பிக்கையும் இழக்கப்படாமல் இருக்க அன்னைமரியும் உதவினார்.

அச்சத்திற்கும் வருத்தத்திற்கும் கைதிகளாகாத இந்த பெண்கள், அதிகாலையிலேயே கல்லறைக்குச் சென்றனர். அன்பினால் நறுமணம் பூசப்பட்ட தங்கள் இதயத்துடன் சென்றனர் அவர்கள். கல்லறை திறந்திருப்பதைக் கண்ட அந்த பெண்கள், அதனுள் நுழைந்தனர். நாமும் இறைவனோடும் மரியன்னையோடும் திருவிழிப்பில் கலந்து மறையுண்மைக்குள் நுழைவோம். அந்த மறையுண்மையே நம்மை சாவிலிருந்து வாழ்வு நோக்கி நடத்திச்செல்கிறது’. இவ்வாறு, தன் பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலி மறையுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்..

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.