2015-04-04 12:27:00

திருத்தந்தையின் சிலுவைப்பாதை திருவழிபாடு


ஏப்.,04,2015. ஆதிகிறிஸ்த‌வ‌ர்க‌ள் சித்ர‌வ‌தைக‌ளுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்ட‌ கொலோசிய‌ம் அர‌ங்கைச் சுற்றி ஆயிர‌க‌ண‌க்கான‌ விசுவாசிக‌ள் குழுமியிருக்க‌, இவ்வெள்ளிய‌ன்று, சிலுவைப்பாதை வ‌ழிப‌ட்டுச் ச‌ட‌ங்கை வ‌ழிந‌ட‌த்திச் சென்றார் திருத்த‌ந்தை பிரான்சிஸ் அவ‌ர்க‌ள்.

இவ்வெள்ளி முன்னிரவு இட‌ம்பெற்ற‌ இந்த‌ சிலுவைப்பாதை பய‌ண‌ம், இவ்வுலகில் இடம்பெறும் பல்வேறு துன்பநிலைகளை, குறிப்பாக, சிறார் பாலினவகையில் தவறாக நடத்தப்படல், மனிதர்கள் வியாபாரப் பொருள்களாக கடத்தப்படல், கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக துன்புறுத்தப்படல் போன்றவைகளை மையக்கருத்தாகக் கொண்டு நடத்தப்பட்டது. அண்மைக்காலங்களில் கிறிஸ்தவர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துவரும் ஈராக், சிரியா, நைஜீரியா எகிப்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து குடும்பங்கள் திருத்தந்தையோடு இணைந்து இந்த சிலுவைப்பதை வழிபாட்டில் சிலுவையைத் தூக்கி பங்கெடுத்தன.

இந்த சிலுவைப்பாதையின் இரண்டாம் நிலையில், இயேசுவின் மீது சிலுவை சுமத்தப்பட்ட நிகழ்ச்சி தியானிக்கப்பட்டபோது, 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் கிறிஸ்தவ மறைக்காக உயிரிழந்த shahbaz bhatti நினைவுகூரப்பட்டார்.

இயேசுவின் ஆடைகள் களையப்பட்ட பத்தாம் நிலை தியானிக்கப்பட்டபோது, இன்றைய உலகில் பாலின வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள், மனித வியாபாரத்திற்கு உள்ளாக்கப்படுவோர் ஆகியோர் நினைவுகூரப்பட்டு அவர்களுக்காக செபிக்கப்பட்டது.

இந்த சிலுவைப்பாதை வழிபாட்டின் இறுதியில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘சிலுவைப் பாதையே இயேசுவின் வாழ்வின் சுருக்கம், மற்றும், தந்தையாம் இறைவனுக்கு அவர் வழங்கிய கீழ்ப்படிதலின் புனித வடிவம்' என்றார். இன்றைய உலகில் தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுதல் மற்றும் கொலைசெய்யப்படுதல் குறித்த ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.