2015-04-01 16:52:00

மரண தண்டனைக்கு எதிராக, மதத் தலைவர்கள் அறிக்கை


ஏப்,01,2015. இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ள மனிதர்களின் உயிரை, நச்சு ஊசிகள், மின்சார நாற்காலி, தூக்குக் கயிறு, துப்பாக்கிச் சூடு ஆகிய அதிகாரப் பூர்வமான வழிகளில் பறிப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீமை என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

கத்தோலிக்கத் திருஅவை உட்பட, பல கிறிஸ்தவ சபைகளும், ஏனைய மதங்களும் இணைந்து, மரண தண்டனைக்கு எதிராக விடுத்துள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்ற கருத்தில், புனித வாரத்தின் ஒரு முயற்சியாக வழங்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, மார்ச் 31, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

"மனிதர்களை நல்வழிப்படுத்த, மரண தண்டனை ஒருபோதும் உதவாது; அது, மென்மேலும் பகைமையையும், பழி உணர்வுகளையும் வளர்க்கவே உதவும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவரும் கருத்துக்களையும், தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர், மதத் தலைவர்கள்.

கிறிஸ்துவின் பாடுகள், மரணம், புது வாழ்வு ஆகிய உண்மைகளைப் பறைசாற்றும் புனித வாரத்தில், மனித உயிர்கள் மதிக்கப்படவேண்டும் என்று பறைசாற்றுவது பொருத்தமான ஒரு முயற்சி என்று, பல்சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.