2015-03-31 17:03:00

நீர்ப்பற்றாக்குறை,புவியியல்-அரசியல் பதட்டநிலைகளை உருவாக்கும்


மார்ச்,31,2015. உலகில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறை, புவியியல் அடிப்படையில் அரசியலில் பதட்டநிலைகளை உருவாக்கும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளவேளை, தண்ணீர் தொடர்புடைய புதிய உடன்பாடுகளை ஏற்படுத்த வேணடும் என்று அனைத்துலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. உதவி பொதுச் செயலர் யான் எலியாசன்.

மனிதர் மாண்புடன் வாழ்வதற்கும், முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும், பாதுகாப்புக்கும்  முன்னுரிமை கொடுக்க வேண்டிய விவகாரங்களில் ஒன்றாக, தண்ணீர் உள்ளது என்று, வாழ்வுக்குத் தண்ணீர் என்ற அனைத்துலக பத்தாண்டு நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டார்.

தண்ணீர்ப் பற்றாக்குறை, தனிப்பட்ட நபர்களின் வாழ்வில் துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலையும் முன்வைத்துள்ளது என்றும் கூறினார் எலியாசன்.

2005 முதல் 2015ம் ஆண்டு வரையுள்ள காலம், வாழ்வுக்குத் தண்ணீர் என்ற அனைத்துலக பத்தாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் பயன்படுத்தப்படும் முறையில் சரியான நிர்வாகம் இல்லையெனில், 2030ம் ஆண்டுக்குள் உலகில் நாற்பது விழுக்காடு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்று ஐ.நா. கூறுகிறது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.