2015-03-31 16:28:00

கிறிஸ்தவர்களும் சமணர்களும் முதியோர் நலனுக்காக வாழ அழைப்பு


மார்ச்,31,2015. குடும்பங்களிலும் சமூகங்களிலும் வாழும் வயதானவர்களைப் பராமரிப்பதற்கு, கிறிஸ்தவர்களும் சமணர்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது திருப்பீடம்.

சமண மதத்தைத் தோற்றுவித்த தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் அவர்கள் பிறந்த நாள் ஏப்ரல் 02, வருகிற வியாழக்கிழமையன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு உலகின் சமண சமூகத்தினர் அனைவருக்கும் நல்வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுள்ளது திருப்பீட பல்சமய உரையாடல் அவை.

இன்றைய உலகில் பல சமூகங்களில், பல வயதானவர்கள், குறிப்பாக, நோயாளிகளும், தனிமையில் வாழ்வோரும் சுமையாகவும், பயனற்றும் நோக்கப்பட்டு இவர்கள் தங்களின் குடும்பங்கள் மற்றும் உறவுகளால் கைவிடப்படுகின்றனர் என்ற கவலையை வெளியிட்டுள்ளது இந்த உரையாடல் அவை.

எனினும், உலகில் பெருமளவான குடும்பங்கள் தங்களின் மரபுகள், விழுமியங்கள் மற்றும் கோட்பாட்டுப் பற்றுறுதிக்கு உண்மையாய் இருந்து வயதானவர்களைப் பராமரிப்பதில் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் உள்ளன என்பதையும் நாம் மறுக்க முடியாது என்றும் அவ்வவை தனது செய்தியில் கூறியுள்ளது.

பல தலைமுறைகளைக் கொண்ட நம் குடும்பங்களைத் தாங்கி நிறுத்தும் முதன்மைத் தூண்களாக உள்ள வயதானவர்கள், தங்களின் வளமான வாழ்வு மற்றும் விசுவாச அனுபவங்களை மட்டுமல்லாமல், நம் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வரலாறையும் நமக்கு வழங்குகின்றனர் என்று அச்செய்தி கூறுகிறது.

பெற்றோரையும், வயதானவர்களையும் அவர்கள் வாழ்வின் இறுதிவரை, மதிப்போடும் அன்போடும் பராமரிக்க வேண்டுமென்ற நன்னெறிக் கடமைகளை பிள்ளைகள் கொண்டிருக்கின்றனர் என்பதை அனைத்து மதங்களுமே போதிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அச்செய்தி, கிறிஸ்தவர்களும் சமணர்களும் ஒன்றிணைந்து வயதானவர்களைப் பராமரிப்பதற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.  

“கிறிஸ்தவர்களும் சமணர்களும் : வயதானவர்கள் பாராமரிப்பை ஒன்றிணைந்து ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியில் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அவ்வவையின் செயலர் அருள்பணி Miguel Ángel Ayuso Guixo ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இன்றைய பீகார் மாநிலத்தில் பாட்னா நகருக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு.599 ஆம் ஆண்டில் பிறந்த வர்த்தமானார், தமது செல்வத்தை எல்லாம் மக்கள் பலருக்கும் தானமாக வழங்கித் துறவு பூண்டு விருப்பு வெறுப்புகளை வென்றவர் என்பதால், மகா வீரர் என வரலாற்றில் போற்றப்படுகிறார். இவர், கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, பேராசை கொள்ளாமை முதலிய நல்லறங்களை மக்களுக்கு வலியுறுத்தி, சமண சமயக் கோட்பாடுகளைப் பரப்பியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.