2015-03-31 17:03:00

இந்தியப் பருவமழையின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வு


மார்ச்,31,2015. இந்தியப் பெருங்கடலின் தரைப் பகுதியிலிருந்து கிடைத்த படிவங்களின் மூலம் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் பருவமழை எப்படி இருந்தது என்பதை அறிவற்கு அறிவியலாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

பிரித்தானிய பன்னாட்டுப் பெருங்கடல் ஆய்வுத் திட்டத்திற்குச் சொந்தமான கப்பல், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்துப் பேசிய, இந்தத் திட்டத்தில் இணைந்து செயலாற்றும் எக்ஸெடர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேட் லிட்லர் அவர்கள், "இந்த ஆய்வானது, இந்தியாவில் பருவமழை பொழிவு இனிமேல் எப்படி மாறும் என்பதை இன்னும் சிறப்பாக அறிந்து கொள்ள உதவும்" என்று கூறினார்.

"80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியப் பருவமழை தீவிரமடைந்ததிலிருந்து இப்போதுவரையுள்ள அதன் பரிணாம வளர்ச்சி குறித்து பதிவுசெய்ய உள்ளதாகவும் லிட்லர் தெரிவித்தார்.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக, இந்தியாவில் பெய்யும் பருவமழையில் 5முதல் 10 விழுக்காடு வரை வருங்காலத்தில் அதிகரிக்கலாம். இது இந்தியாவின் பொருளாதாரத்திலும் விவசாயத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்த மார்ச் மாதம் அதிகமான கனமழை பெய்த மாதமாக உள்ளதாகவும், இதேபோன்ற நிலை 1915ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது இடம்பெற்றுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.