2015-03-31 16:53:00

3ம் முறையாக அரசுத்தலைவர்க்குப் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு


மார்ச்,31,2015. ஆப்ரிக்க நாடாகிய புருண்டியில் அரசுத்தலைவர் பதவிக்கு மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவது அந்நாட்டு அரசியல் அமைப்புக்கு முரணானது என்று அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

புருண்டி அரசுத்தலைவர் Pierre Nukurunziza அவர்கள் மூன்றாம் முறையாக, ஐந்தாண்டுகால அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிட திட்டமிட்டிருப்பதற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ஆயர்கள், இவ்வாறு நடந்தால் இந்த ஆப்ரிக்க நாடு பிரிவினைகளையும், மோதல்களையும், ஏன் சண்டையைக்கூட எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

வருகிற ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில், அரசுத்தலைவர் Nukurunziza அவர்கள் மூன்றாம் முறையாக, அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடாது என்று  ஞாயிறு மறையுரையில் எச்சரித்தார் புருண்டி பேராயர் Simon Ntamwana.

கடவுளுக்கு எதிராகச் செயல்பட்ட யூதேயாவின் கடைசி அரசர் செதெக்கியா பற்றிக் குறிப்பிட்டு மறையுரையாற்றிய பேராயர் Ntamwana அவர்கள், அரசியல் தலைவர்கள், அன்பு மற்றும் ஒருவரையொருவர் மதித்தல் ஆகிய கோட்பாட்டின்படி நாட்டை வழிநடத்த வேண்டுமென்று வலியுறுத்தினார்.

75 விழுக்காட்டுக்கு அதிகமான கத்தோலிக்கரைக் கொண்டுள்ள புருண்டி நாட்டில் கத்தோலிக்க ஆயர்களின் இந்த எச்சரிக்கை, குடிமக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கும் என கூறப்படுகின்றது.

ஆதாரம் : AFP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.