2015-03-28 16:11:00

மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்பட அழைப்பு


மார்ச்,28,2015. மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் உயிர்வாழ்வதற்கான அச்சத்தை எதிர்கொள்வதால், இவர்களைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“மத்திய கிழக்கில், இன அல்லது மதத்தின் அடிப்படையில் தாக்குதல்களுக்கும் உரிமை மீறல்களுக்கும் பலியாகும் மக்கள்” என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவையில் இவ்வெள்ளியன்று நடைபெற்ற பொது விவாதத்தில் இவ்வாறு தனது வேண்டுகோளை முன்வைத்தார் பேராயர் Bernardito Auza.

ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் Auza அவர்கள், இன அல்லது மதத்தின் அடிப்படையில் மக்கள் மேலும் தாக்குதல்களுக்கும், உரிமை மீறல்களுக்கும் பலியாகாமல் தடுப்பதற்கு, அனைத்துலக சமுதாயம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு கேட்டுள்ளார். 

இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு, இன அழிப்பைத் தூண்டும் நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தடுப்பதற்குக் காலம் தாழ்த்தாது உடனடியாகச் செயல்படுமாறு, மத்திய கிழக்குப் பகுதியிலும், உலகெங்கிலும் வாழும் நன்மனம் கொண்ட தலைவர்களையும், மக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார் பேராயர் Auza.

ஒரு நாடு தனது மக்களை இத்தகைய குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்கு இயலாமல் அல்லது அதில் விருப்பம் காட்டாமல் இருந்தால், ஐ.நா. ஒப்பந்தத்துக்கு ஒத்தவகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்துலக சமுதாயம் தயாராக இருக்க வேண்டுமெனவும் கூறினார் பேராயர் Auza.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.