2015-03-28 15:10:00

குருத்தோலை ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


இன்று நாம் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920… குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920.

1920ம் ஆண்டு, அமெரிக்காவின் மூன்று பகுதிகளில் குருத்தோலை ஞாயிறன்று வீசிய சூறாவளிக் காற்றினால் ஏறத்தாழ 400 பேர் இறந்தனர்; 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதேபோல், 1965ம் ஆண்டிலும், அமெரிக்காவின் சில பகுதிகளில், குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்ற வேளையில், சூறாவளி வீசியதாகச் சொல்லப்படுகிறது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறாவளிகள் ஏற்படுவது அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் வரும் ஒரு செய்திதான். இதே மாதங்களில்தான் தவக்காலத்தின் இறுதி நாட்களும் இடம்பெறுகின்றன. தவக்காலத்தின் ஆரம்பம் வசந்த காலத்துடன் இணைந்து வருவதை நாம் சிந்தித்ததுபோல், தவக்காலத்தின் இறுதி நாட்களை சூறாவளி நாட்களாக சிந்திப்பதும் பயனளிக்கும். குருத்தோலை ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம்.

வரலாற்றில் நிகழ்ந்த முதல் குருத்தோலை ஞாயிறன்று, சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. காற்று வடிவத்தில் அல்ல, கடவுள் வடிவத்தில் வந்த சூறாவளி. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; மரங்களை, வீடுகளை அடியோடு சாய்க்கும்; பொதுவில் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், எருசலேமை தலைகீழாகப் புரட்டிப்போட்டன என்பதை உணரலாம்.

இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. “ஏற்பாடு செய்யப்பட்டது” என்பதை விட “தானாகவே ஏற்பட்டது” என்று சொல்வதே மிகவும் பொருந்தும். திருவிழா நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் இத்தகையக் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கின. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.

இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார். அதைத் தொடர்ந்து, மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை அப்புறப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!

குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும் தாய் திருஅவை புனிதவாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசு, இவ்வுலகில்  வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவு கூறுகிறோமே, அதனால்... அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே!

நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டது. இயேசு என்ற இளைஞன் நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, நொறுக்கி ஒரு கந்தல் துணி போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னார். அதேபோல் இந்தப் புனிதவாரம் முழுவதும் நடந்த எல்லா நிகழ்வுகளும் புனிதத்தை இந்த பூமிக்குக் கொண்டு வந்த வாய்க்கால்கள். வெளிப்படையாகத் தெரியாத இந்தப் புனிதத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். புனிதவாரம் முழுவதும் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.

புனிதவாரம் முழுவதும் நம் சிந்தனைகளில் அடிக்கடி பதிக்கப்படும் ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே மிகவும் கொடூரமானது, சிலுவை. மிகப் பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர் உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, நாம் கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசுவின் உருவம், கோடான கோடி மக்களின் வாழ்வில் சூறாவளியை உருவாக்கி, முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது; மீட்பைக் கொணர்ந்துள்ளது.

சிலுவையில் அறையுண்ட இயேசு ஒருவர் வாழ்வில் உருவாக்கும் மாற்றங்களைப் பற்றி William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய ஒரு கதை இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று அவர்களிடம் பேசி வந்தார் இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.

பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் எல்லை மீறிச் சென்றது.

ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை, பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.

அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். சுற்றி இருந்த மக்கள், அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். இளைஞன் உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவு செய்து இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்" என்று கூறினார்.

இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப் பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.

இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.

சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த புனித வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன? அந்த இளைஞனை ஆட்கொண்டு, அவர் வாழ்வை மாற்றிய இறைவன், இன்றைய உலகில் வாழும் இளையோரின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க வேண்டுவோம்.

ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, தாய்த் திருஅவை, உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. 1985ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை, 2ம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த இளையோர் நாளின் மையமாக அமையும் ஓர் அடையாளம்... சிலுவை.

துன்பங்களைவிட்டு விலகி, இன்பத்தை மட்டுமே தேடிச் செல்பவர், இளையோர், என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் வண்ணம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மைய அடையாளமாக விளங்குவது, அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சுமந்துச் செல்லும் சிலுவை. கடந்த 30 ஆண்டுகளாக, உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், இளையோர் சுமந்து வந்துள்ள சிலுவை, 2016ம் ஆண்டு, போலந்து நாட்டின் கிரகோவ் (Krakow) நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையமாக மீண்டும் அமையும்.

2013ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற 'உலக இளையோர் நாள்' நிகழ்வுகளை, முன்னின்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகள் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையக் கருத்துக்களாக, மலைப்பொழிவில் இயேசு கூறிய 'பேறுபெற்றோர்' வார்த்தைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்ற ஆண்டு உலக இளையோர் நாளின் மையக்கருத்து: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. (மத்தேயு 5:3)

இவ்வாண்டின் மையக்கருத்து: தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். (மத்தேயு 5:8)

அடுத்த ஆண்டு, போலந்து நாட்டில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாளின் மையக் கருத்து: இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். (மத்தேயு 5:7)

'பேறுபெற்றோர்' என்று இவ்வுலகம் காட்டும் மாய வழிகளில் சென்று தங்கள் வாழ்வைத் தொலைத்துவிடும் இளையோரின் வேதனைகளை நாம் அறிவோம். "உலக இளையோர் நாளை" சிறப்பிக்கும் இளையோர், ஏழையரின் உள்ளம், தூய உள்ளம், கருணை உள்ளம் என்று இயேசு சொல்லித்தரும் பேறுபெற்ற உள்ளம் கொண்டவர்களாய் வாழும் வரத்தை, இறைவன் அவர்களுக்கு வழங்க மன்றாடுவோம்.

இறுதியாக ஒரு சிந்தனை: இவ்வாண்டு பிப்ரவரி மாதம், ISIS தீவிரவாதிகளால், லிபியா கடற்கரையில் கழுத்து அறுபட்டு கொல்லப்பட்ட 21 கிறிஸ்தவ இளையோர் நம் நினைவை இப்போது நிறைக்கின்றனர். ISIS தீவிரவாதிகள் வெளியிட்ட அந்தக் கொடூர வீடியோவில், “People of the cross, followers of the hostile Egyptian church - A message signed with blood to the nation of the cross.” அதாவது, "சிலுவையின் மக்கள், எதிராளிகளான எகிப்து சபையின் தொண்டர்கள் - சிலுவையின் நாட்டிற்கு இரத்தத்தால் கையெழுத்திடப்பட்ட ஒரு செய்தி" என்ற வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

சிலுவையின் மக்கள் என்று தீவிரவாதிகளால் முத்திரை குத்தப்பட்ட இந்த இளையோர், தங்கள் கழுத்து அறுபடும் நேரத்தில் இயேசுவின் பெயரைச் சொன்னபடியே இறந்தது, இளையோர் கொண்டிருக்கும் உறுதியை நமக்கு ஆழமாக உணர்த்துகிறது. நன்மையை இவ்வுலகில் நிலைநாட்ட, இளையோர் இத்தகைய உறுதியும், துணிவும் கொண்டு செயலாற்றவேண்டும் என்று சிலுவை நாயகன் இயேசுவை மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.