2015-03-28 14:47:00

கடுகு சிறுத்தாலும் - கேட்க விழைவதைக் கேட்கிறோம்


தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வயல்வெளிகளில் கழித்துவந்த வயதான ஒரு பெரியவரை, அவரது பேரன், முதல்முறையாக நகரத்திற்கு அழைத்துச் சென்றார். நகரின் பல இடங்களை அவர்கள் இருவரும் சுற்றிவந்தபோது, சப்தம் நிறைந்த ஒரு சாலையோரம், நடைபாதையில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென, தாத்தா பேரனிடம், "அதைக் கேட்டாயா?" என்று கேட்டார். "எதைப்பற்றிச் சொல்கிறீர்கள்?" என்று பேரன் மறுகேள்வி கேட்டார். "அந்தச் சுவர்கோழியின் ஓசையைத்தான் சொன்னேன்" என்று சொன்னபடி, தாத்தா அருகிலிருந்த ஒரு சுவரருகே சென்றார். அங்கே, சுவரில் இருந்த ஒரு விரிசலில் ஒரு சுவர்கோழி சப்தமிட்டுக் கொண்டிருந்தது.

"தாத்தா, இத்தனை இரைச்சலில் எப்படி உங்களால் இதைக் கேட்க முடிந்தது?" என்று வியந்து கேட்ட பேரனுக்கு, தாத்தா பதில் ஏதும் சொல்லாமல், தன் 'பாக்கெட்'டிலிருந்து சில நாணயங்களை எடுத்து, அவற்றை 'சிமெண்ட்' நடைபாதையில் போட்டார். சில்லறைகள் சிதறிய சப்தம் கேட்டதும், சாலையின் இருபுறமும் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பலரும் நின்று, தங்கள் 'பாக்கெட்'டையும், தங்கள் காலடிக்குக் கீழ் நடைபாதையையும் கூர்ந்து கவனித்தனர்.

தாத்தா பேரனிடம், "நாம் எதைக் கேட்க விழைகிறோமோ, அதைக் கேட்கப் பழகிக்கொள்கிறோம்" என்று சொன்னார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.