2015-03-26 16:12:00

திருத்தந்தையின் தூரின் நகர் பயண விவரங்கள்


மார்ச்,26,2015. ஜூன் 21, 22 ஆகிய நாட்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் தூரின் நகரில் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணம் குறித்த விவரங்களை, தூரின் உயர்மறைமாவட்டப் பேராயர் Cesare Nosiglia அவர்கள், வத்திக்கானில், இப்புதனன்று, செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

ஜூன் 21, ஞாயிறன்று காலை 8 மணிக்கு தூரின் நகர் சென்றடையும் திருத்தந்தை, நேராக, பேராலயம் சென்று, அங்கு, இயேசுவின் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட புனிதத் துணிக்கு முன் செபத்தில் ஈடுபடுவார்.

10.45 மணியளவில், Vittorio என்ற சதுக்கத்தில் திருப்பலி ஆற்றியபின், நண்பகல் மூவேளை செப உரையையும் வழங்கும் திருத்தந்தை, பேராயர் இல்லத்தில், வளர் இளம் பருவக் கைதிகள் சிலருடன் மதிய உணவு அருந்துவார்.

தூரின் நகரில் பணியாற்றி, இறையடி சேர்ந்த புனித ஜான் போஸ்கோ அவர்கள் பிறப்பின் இரண்டாம் நூற்றாண்டு நினைவு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதால், ஜூன் 21 பிற்பகல் 3 மணியளவில், தூரின் நகர், சகாய அன்னை பசிலிக்காவில் சலேசிய துறவு சபையைச் சேர்ந்த இருபால் துறவியரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார்.

மாலை 6 மணிக்கு, மீண்டும் ஒருமுறை Vittorio சதுக்கத்தில் தூரின் நகர் இளையோரை சந்தித்து உரையாற்றுவார் திருத்தந்தை.

ஜூன் 22, திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உறவினர்களைச் சந்திக்கிறார் என்றும், அவர்களுக்கு திருப்பலியாற்றி, அவர்களோடு மதிய உணவு அருந்துகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தன் இருநாள் பயணத்தின் இறுதியில், தூரின் நகரில் வணங்கப்பட்டு வரும் புனிதத் துணியைப் பாதுகாத்து வரும் பணிக்குழுவினர் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்தபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானுக்குத் திரும்புவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.