2015-03-26 15:50:00

கார்மேல் சபையினரின் உலக அமைதி செபத்துடன் திருத்தந்தை


மார்ச்,26,2015. மனிதகுலத்தை வாட்டி, வதைக்கும் போர், வன்முறை ஆகிய நெருப்புக்களை, இறைஅன்பு என்ற தீயினால் வெற்றிபெறுவதற்கு கார்மேல் துறவு சபையினர் மேற்கொள்ளும் உலக அமைதி செபத்தில் நானும் இணைகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அவிலா நகர் புனித தெரேசா அவர்கள் பிறந்த 500ம் ஆண்டு நினைவு, மார்ச் 28, இச்சனிக்கிழமை  சிறப்பிக்கப்படும் வேளையில், உலகெங்கிலும் பணியாற்றும் கார்மேல் துறவு சபையின் இருபால் துறவியர் அனைவரும் மார்ச் 26ம் தேதி, வியாழனன்று, உலக அமைதிக்கென ஒரு மணிநேர ஆராதனையில் ஈடுபட, கார்மேல் துறவு சபையின் உலகத் தலைவர் அருள்பணி Saverio Cannistrà அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகளாவிய அமைதி ஆராதனையை, திருத்தந்தை துவங்கி வைத்த இவ்வியாழன் காலை, இச்சபையின் துணைத் தலைவர், வத்திக்கான், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை ஆற்றியத் திருப்பலியில் கலந்துகொண்டார்.

மறைநூல் அறிஞராக, திருஅவை கொண்டாடும் புனித தெரேசா அவர்களின் பரிந்துரையால், உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்துவரும் ஆயுதம் தாங்கிய வன்முறைகள் முடிவுக்கு வர செபிப்போம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

உலக அமைதியை மையப்படுத்தி கார்மேல் துறவு சபையினர் மேற்கொள்ளும் உலகளாவிய செப வழிபாடுகள், மார்ச் 28, புனித தெரேசா அவர்களின் 500ம் ஆண்டு நிறைவு நாள் முடிய தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.