2015-03-26 16:05:00

ISIS குழுவால் கொல்லப்பட்டவரின் சகோதரர்,திருத்தந்தை சந்திப்பு


மார்ச்,26,2015. மனித சமுதாயத்தின் ஒருங்கிணைப்பு, நீதி ஆகியவற்றைக் குலைக்கும் வகையில், இலாபம் என்ற ஒரே குறிக்கோளுடன் இவ்வுலகம் செல்லவேண்டாமென நான் இதயப்பூர்வமாக விண்ணப்பிக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மார்ச் 25, இப்புதனன்று புனித பேதுரு வளாகத்தில், கொட்டும் மழையில், திருத்தந்தை வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில் கலந்துகொள்ள, இத்தாலியின் கலாப்ரியா பகுதியில், பொருளாதாரச் சரிவைச் சந்தித்துவரும் தொழிலாளிகள் வந்திருந்ததை உணர்ந்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

குடும்பத்திற்குத் தேவையான உணவை ஒவ்வொருநாளும் தருவது, மனித மாண்பை விரும்பும் அனைவரின் முயற்சி என்றும், பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும் இளையோர், இத்தகைய மாண்பை இழந்து, குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுடன் சேரும் ஆபத்து உள்ளது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மேலும், சென்ற ஆண்டு, செப்டம்பர் மாதம், ISIS தீவிரவாதிகளால் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட David Haines என்ற பிரித்தானிய பிறரன்புப் பணியாளரின் சகோதரர், Mike Haines அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை புதன் மறையுரையின் இறுதியில் சந்தித்தார்.

ISIS தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்ட மற்றோர் இளையவர் Alan Henning அவர்களின் மனைவி, Barbara Henning  மற்றும் Mike Haines இருவரும் கையெழுத்திட்ட ஓர் அறிக்கையில், வன்முறையாளர்கள் ஒருசிலரின் முயற்சிகள் உலக அமைதியைக் குலைப்பதற்கு நாம் விடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை, Mike Haines மற்றும் இலண்டனிலிருந்து வந்திருந்த ஓர் இஸ்லாமிய அறிஞர், Shahnawaz Haque என்பவரும் வத்திக்கானுக்குக் கொணர்ந்தனர் என்று பிரித்தானிய தூதர், Nigel Baker அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Zenit / VIS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.