2015-03-25 14:36:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை–குடும்பத்திற்காக செபம்


மார்ச் 25,2015. உரோம் நகரில் செவ்வாய் இரவு துவங்கிய மழை, புதன் காலையும் தொடர்ந்து கொண்டிருக்க, திருத்தந்தையின் மறைக்கல்வி உரையைக் கேட்க வருபவர்களுக்கென இருவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதாவது, நோயுற்றோரை முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்திலும், ஏனையோரை வழக்கம்போல் தூய பேதுரு வளாகத்திலும் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் தங்கள் கைகளில் குடைகளை விரித்துப் பிடித்தவர்களாக, தூய பேதுரு வளாகத்தை நிறைத்து நிற்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் நோயாளிகளைச் சந்திக்க ஆறாம் பவுல் அரங்கம் சென்றார். இயேசுவின் உயிர்ப்புக்காகத் தயாரித்துவரும் இவ்வேளையில் தனக்காகச் செபிக்குமாறும், தங்கள் துன்பங்களை இறைவனுக்கு அர்ப்பணமாக்கி மகிழ்ச்சியுடன் இயேசுவின் உயிர்ப்பு நோக்கி இறைவனுடன் நடைபோடுமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அவர்களுக்கு ஒரு சிறிய உரையும் வழங்கி, அவர்களை அசீர்வதித்து, அரங்கிலுள்ள பெரிய தொலைக்காட்சித் திரையில் தன் மறைக்கல்வி போதனைக்குச் செவிமடுக்குமாறு கேட்டு, வளாகம் நோக்கிச் சென்றார் திருத்தந்தை.

வளாகம் எங்கும் பல வண்ணக் குடைகளால் நிரம்பி வழிய, மக்களை நோக்கி காலை வணக்கத்தை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலிருந்து கொண்டு இந்த மறைக்கல்வி உரையை பெரிய திரை மூலம் கண்டுவரும் நோயுற்றோரை சகோதரத்துவ உணர்வுடன் கைதட்டி ஊக்கப்படுத்துவோம் என வேண்டுகோள் விடுத்தார். உடனேயே நகைச்சுவை உணர்வுடன், ‘குடைகளைப் பிடித்திருக்கும் உங்களால் கைதட்டுவது சிரமமே’ எனவும் கூறினார் திருத்தந்தை.

குடும்பம் குறித்த நம் மறைக்கல்வி உரை தொடரில் இன்று, ஒரு சிறப்பு கருத்து குறித்து நோக்குவோம், அதாவது, செபம் குறித்து. குடும்பம் குறித்த உலக ஆயர் மாமன்றத்திற்கான தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில் இன்று நாம் சிறப்பிக்கும், அன்னைமரிக்கு மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்ட விழா, இறைவன் மனிதகுல மகனாக உருவெடுத்ததற்கும், குடும்பத்தின் மறைப்பணிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது என தன் மறையுரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் திட்டத்தின்படி, இயேசு மனித உருவெடுத்து, யோசேப்பு-மரியா எனும் மனித குல குடும்பத்தில் வரவேற்கப்பட்டு அங்கு வளர்ந்தார். இன்று, மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்ட திருவிழாவுடன், வாழ்விற்கான நாளும் சிறப்பிக்கப்படுகின்றது. இந்த வாழ்விற்கான நாள், ஒவ்வொரு மனித உயிரும், மீறமுடியாத மாண்பைக் கொண்டுள்ளது என்பது மதிக்கப்படவேண்டும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது. துவக்கக் கலத்திலிருந்தே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதும், குழந்தைப் பேற்றின் மூலம் மனித குலத்தை அழியாமல் காக்கும் கடமையையும் கொண்டுள்ள குடும்பம், சமூகத்தின் இதயமாக இருந்து, அன்பு மற்றும் வாழ்வின் சமூகமாக இருக்க அழைப்புப் பெற்றுள்ளது. குடும்பமும் திருஅவையும் எந்த அளவு நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இதில் நாம் காண்கிறோம். அனைத்துக் குடும்பங்களுடன் உடன்பயணித்து அவர்களுக்கு ஆதரவு தருவதற்கு, குறிப்பாக அதிக உதவித் தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவுவதற்கு திருஅவை அழைப்புப் பெற்றுள்ளது. இடம்பெறவிருக்கும் குடும்பம் குறித்த மாமன்றத்திற்காக தொடர்ந்து செபிப்போம். இந்த மாமன்றம், நல்லாயனாம் இயேசுகிறிஸ்து, தம் மந்தையின் மீது வைத்திருக்கும் அக்கறையையும் இரக்கத்தையும் குறித்து ஆழ்ந்து சிந்திப்பதாகவும், அனைத்துக் குடும்பங்களுக்கான இறைவனின் இரக்கம் நிறைந்த அன்பு குறித்த உண்மைக்கு சாட்சியாக விளங்குவதில் தெளிவாகவும் சிறந்த அர்ப்பணத்துடனும் வாழ உதவட்டும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும், குறிப்பாக, கேரளாவிலிருந்து வந்திருந்த இந்து சமூகப் பிரதிநிதிகள் குழுவிற்கும் தன் வாழ்த்துக்களை அளித்து, அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.