2015-03-24 15:22:00

நேப்பிள்ஸ் திருத்தூதப் பயணத்தில் புனிதரின் இரத்தம் உருகியது


மார்ச்,24,2015. “துன்பம், மனமாற்றத்துக்கான அழைப்பு, இது நமது குறையுள்ள மற்றும் வடுப்படும் தன்மையை நினைவுபடுத்துகின்றது” என்ற தனது சிந்தனையை இச்செவ்வாயன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், கடந்த சனிக்கிழமை பிற்பகலில் நேப்பிள்ஸ் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் குருத்துவ மாணவருக்கு சில அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, நான்காம் நூற்றாண்டில் இறந்த புனிதர் ஒருவரின் உறைநிலையில் இருந்த இரத்தம் உருகி ஓர் அற்புதம் நடந்துள்ளது.

மறைசாட்சியான புனித ஜனுவாரிஸ் அவர்களின் இரத்தத்தைக் கொண்ட கண்ணாடிக் குடுவை நேப்பிள்ஸ் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்சந்திப்பின்போது அத்திருப்பண்டத்தை எடுத்து ஆசிர் வழங்கினார். அப்போது அதன் ஒரு பகுதி உருகி இருந்தது.

வழக்கமாக, மே 01, இப்புனிதரின் விழாவாகிய செப்டம்பர் 19, டிசம்பர் 16 ஆகிய மூன்று நாள்களில் இந்த இரத்தம் உருகும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் மார்ச் 21, கடந்த சனிக்கிழமையன்று இதில் ஒரு பகுதி உருகியுள்ளது.

இதற்கு முன்னர் வழக்கமான இந்த மூன்று நாள்கள் தவிர, 1848ம் ஆண்டு திருத்தந்தை 9ம் பத்திநாதர் அவர்களுக்கு இத்திருப்பண்டம் உருகியுள்ளது. 

இது குறித்து நேப்பிள்ஸ் கர்தினால் Crescenzio Sepe அவர்கள் திருத்தந்தையிடம் தெரிவித்தபோது, புனிதர் நம்மைச் சிறிதளவே அன்புகூருகிறார் எனத் தெரிகிறது, நாம் மேலும் மனம் மாற வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார் திருத்தந்தை.

மூன்றாம் நூற்றாண்டில் பிறந்து நான்காம் நூற்றாண்டில் இறந்த மறைசாட்சியான புனித ஜனுவாரிஸ், நேப்பிள்ஸ் நகர் பாதுகாவலராவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.