2015-03-24 15:16:00

கடவுளின் வழிகளை ஏற்றுக்கொள்வதற்குப் புனித வாரம் உதவுவதாக


மார்ச்,24,2015. கடவுளின் அன்பைக் குறை சொல்லாமலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அனைத்துக் கிறிஸ்தவர்களும் அழைக்கப்படுகின்றனர் என்று இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்ரயேல் மக்கள் தங்களின் பாலைவனப் பயணத்தின்போது கடவுளுக்கு எதிராக எவ்வாறு பேசினர் என்பது பற்றிக் கூறும் இச்செவ்வாய் திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடவுளின் வழிகளை ஏற்றுக்கொள்வதற்குப் புனித வாரம் நமக்கு உதவுவதாக என்றும் கூறினார். 

பாலைவனப் பயணத்தில் இஸ்ரயேலருக்கு வழங்கப்பட்ட உணவை அம்மக்கள் வெறுத்துப் பேசியது பற்றி விளக்கிய திருத்தந்தை, கடவுள், ஆயிரக்கணக்கான  பல்வேறு வழிகளில் நமக்கு மீட்பை வழங்குகிறார், ஆனால், கடவுளின் வழிகளை  ஏற்றுக்கொள்வதற்கு நாம் அடிக்கடி திறனற்றவர்களாக உள்ளோம் என்றும் கூறினார். 

கடவுள் கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி இந்த இஸ்ரயேல் மக்களைத் தண்டித்தார், அவர்களில் பலர் இறந்தனர், ஆயினும், மோசே மக்களுக்காக மன்றாடினார், கடவுளின் ஆணைப்படி வெண்கலத்தில் கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து உயர்த்தினார், பாம்புக் கடிக்குப் பின்னர் அதைப் பார்த்தவர்கள் பிழைத்துக் கொண்டனர் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று எத்தனை கிறிஸ்தவர்கள் தங்களின் துன்பமெனும் பாலைநிலத்தில் முணுமுணுத்து கடவுளின் வழிகளை ஏற்காமல் இறக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

நாமும் இந்த மக்களின் தவறையே அடிக்கடி செய்கிறோம், வாழ்வின் அதிருப்திகளால் பல கிறிஸ்தவர்கள் நஞ்சூட்டப்பட்டுள்ளோம், கடவுள் நல்லவர், வாழ்வின் கடினமான நேரங்களை ஏற்பதற்கு அவரின் அருளை மன்றாடுவோம் என்று தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.