2015-03-23 16:06:00

1000 கிராமங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்த மனிதாபிமானி


மார்ச்23,2015. உலகில் தண்ணீர் தொடர்பான துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு  வழங்கப்படும் 'ஸ்டாக்ஹோம் வாட்டர்' விருதைப் பெற்றுள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த ராஜேந்திர சிங் என்பவர்.

கிராமப்புற இந்தியாவின் நீர் பாதுகாப்பை வலுவாக்கும் விதமாக, அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ராஜேந்திர சிங் அவர்கள் மேற்கொண்டு வரும் கடின முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் பணியாற்றிவந்த ராஜேந்திர சிங் அவர்கள், தண்ணீருக்காக மக்கள் படும் அவலங்களை பார்த்து, மக்களுக்கு தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று இப்பிரச்சனைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவராவார்.

பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி, தண்ணீர் தேவையினை, அவர் பூர்த்தி செய்து வருவதோடு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் உதவியுடன் மழைநீரை சேகரிப்பது, நீர்நிலைகளை புணரமைப்பது, நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய முறையினை பயன்படுத்தி நீர்வளத்தைப் பெருக்குதல் ஆகிய பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறார்.

தண்ணீர் மீதான போரை அமைதியாக மாற்ற வேண்டும், இதுவே தன்னுடைய இலக்கு என்று கூறியுள்ளார் 'வாட்டர் மேன் ஆப் இந்தியா' என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்பு ஒன்று, உலகில் தண்ணீர் தொடர்பான துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு‘ஸ்டாக்ஹோம் வாட்டர்’ என்ற விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

ஆதாரம் : TAMILWIN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.