2015-03-21 15:28:00

நேப்பிள்ஸின் மீட்புக்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க அழைப்பு


மார்ச்,21,2015. கைதிகளைச் சந்திப்பதற்கு முன்னர் நேப்பிள்ஸ் நகரின் Plebiscito வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நேப்பிள்ஸ் நகரின் மீட்புக்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு விண்ணப்பித்தார்.

இயேசுவின் வார்த்தைகள் வல்லமை மிக்கவை, அவை இவ்வுலகின் சக்தியைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அது இறைவனின் சக்தியைக் கொண்டுள்ளது, அந்தச் சக்தி அன்பே, ஆதலால் இயேசுவின் வார்த்தைகளை தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்ளுமாறும் கூறினார் திருத்தந்தை.

குற்றச்செயல்களைப் புரிவோர் மற்றும் ஊழல் வாழ்வு வாழ்வோர் மனம் மாற வேண்டுமென அழைப்பு விடுத்த திருத்தந்தை, நேப்பிள்ஸ் மக்கள் தங்களிடமிருந்து நம்பிக்கை திருடப்பட்டுவிடாதபடி கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நேர்மையற்ற, ஏமாற்று வழியில் எளிதாகப் பணம் சேர்ப்பதற்குத் தங்களை ஈடுபடுத்தாமலும், இளையோர், ஏழைகள், நலிந்தவர்கள் போன்றோரை போதைப்பொருள் வர்த்தகம், மற்றும் பிற குற்றங்களில் பயன்படுத்தும் குற்ற நிறுவனங்களை உறுதியுடன் எதிர்த்துச் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

குற்றவாளிகளும், அவர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்களும் அன்புக்கும் நீதிக்கும் மனம் திரும்புங்கள் என்று திருஅவை மீண்டும் சொல்கிறது, கடவுளின் கருணையைக் காண்பதற்கு உங்களை அனுமதியுங்கள், அனைவரையும் மன்னிக்கும் இறையருளால் ஒரு நேர்மையான வாழ்வுக்குத் திரும்ப இயலும் என்றும் நேப்பிள்ஸ் மக்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.