2015-03-21 15:09:00

திருத்தந்தை - நேப்பிள்ஸ் நகருக்கு ஒருநாள் திருத்தூதுப் பயணம்


மார்ச்,21,2015. இச்சனிக்கிழமை காலை 7.15 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் நேப்பிள்ஸ் நகருக்கு ஒருநாள் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை 8 மணிக்கு முதலில் Pompeii செபமாலை அன்னை திருத்தலம் சென்றார்.

செபமாலை அன்னை திருவுருவத்துக்கு முன்பாக அமைதியில் செபித்த திருத்தந்தை, அனைவருக்காகவும் சப்தமாகவும் செபித்தார்.

திருஅவையின் தாயே, 12 விண்மீன்களால் முடிசூட்டப்படவரே, புனித செபமாலை அன்னையே, வெறுப்பு மற்றும் இரத்தத்தின் பல சாலைகளை, எங்கள் துயரங்களை, ஆயிரக்கணக்கான பழைய மற்றும் புதிய ஏழ்மைகளை, எங்கள் பாவங்களை உமது கருணையிடம் அர்ப்பணிக்கின்றோம், உம் இதயத்துக்கு ஏற்ற நல்லதோர் உலகை அமைக்க எங்களுக்கு உதவும், கடவுளின் மன்னிப்பை எங்களுக்குப் பெற்றுத்தாரும் தாயே என்று செபித்தார் திருத்தந்தை.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் நேப்பிள்ஸ் நகர் சென்று புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் வளாகத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாற்றினார்.

பிற்பகலில் புனித ஜனுவாரிஸ் பேராலயத்தில் 3ம் நூற்றாண்டு ஆயரும் மறைசாட்சியுமான புனித ஜனுவாரிஸ் திருப்பண்டத்தைத் தரிசித்து, அங்கே குருக்கள் மற்றும் துறவறத்தாரைச் சந்தித்தார். மாலை 5 மணிக்கு இளையோரைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.