2015-03-20 15:21:00

திருத்தந்தை நிறைவேற்றும் புனித வாரத் திருவழிபாடுகள்


மார்ச்,20,2015. இம்மாதம் 29ம் தேதி தொடங்கும் புனித வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைவகித்து நிறைவேற்றும் திருவழிபாடுகள் குறித்த விபரங்கள் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளன.

திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு Guido Marini அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் மார்ச் 29, ஞாயிறு காலை 9.30 மணிக்கு, திருத்தந்தையின் குருத்தோலைப் பவனியும், அதைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்’ என்ற தலைப்பில் இக்குருத்தோலை ஞாயிறன்று முப்பதாவது உலக கத்தோலிக்க இளையோர் தினமும் சிறப்பிக்கப்படும்.

ஏப்ரல் 02, புனித வியாழன் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியும், ஏப்ரல் 3 புனித வெள்ளி மாலை 5 மணிக்கு திருப்பாடுகள் திருவழிபாடும், பின்னர் இரவு 8.15 மணிக்கு கொலோசேயும் அரங்கத்தில் சிலுவைப்பாதையும் நடைபெறும்.

ஏப்ரல் 04, புனித சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கிறிஸ்து உயிர்ப்பு திருவிழிப்புத் திருவழிபாட்டைத் தொடங்கும் திருத்தந்தை திருமுழுக்கு அருளடையாளத்தையும் நிறைவேற்றுவார்.

ஏப்ரல் 05 ஞாயிறு காலை 10.15 மணிக்கு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியைத் தொடங்கும் திருத்தந்தை, நண்பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய பால்கனியில் நின்று உரோம் நகருக்கும் உலகுக்குமான ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தியையும் ஆசிரையும் வழங்குவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.