2015-03-20 15:16:00

எந்த ஒரு குற்றமும் ஒருபோதும் மரண தண்டனைக்குத் தகுதியானதல்ல


மார்ச்,20,2015. வாழ்வு, குறிப்பாக, மனித வாழ்வு கடவுளுக்கு மட்டுமே உரியது என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவது மனிதப் பண்புக்கும், இறை இரக்கத்துக்கும் முரணானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மரண தண்டனைக்கு எதிரான அனைத்துலக குழுவின் தலைவருக்கு இஸ்பானியத்தில் இவ்வெள்ளியன்று ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அளவில் மரண தண்டனை நிறுத்தப்படுவதற்கு ஓய்வின்றி உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை கொடூரமானது, மனிதமற்றது மற்றும் மனித வாழ்வின் மாண்பை அவமதிப்பது என்றும், எந்த ஒரு குற்றமும் ஒருபோதும் மரண தண்டனைக்குத் தகுதியானதல்ல என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இவ்வெள்ளியன்று வத்திக்கானில் தான் சந்தித்த இந்த அனைத்துலக குழுவின் உறுப்பினர்கள் வழியாக இக்கடிதத்தை வழங்கியுள்ள திருத்தந்தை, ஒரு மனிதரைக் கொலை செய்வதன்மூலம் நீதியை ஒருபோதும் நிலைநாட்ட முடியாது, மாறாக, பழிவாங்குதலை ஊக்குவிக்கின்றது என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவது மனிதமற்ற செயல் என்றும் கூறியுள்ளார்.

மனித வாழ்வு தாயின் கருவறை முதல், அது இயற்கையான மரணம் அடையும்வரை புனிதமானது என்பதை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, எல்லா வாழ்வும் புனிதமானது, ஏனெனில் மனிதர் ஒவ்வொருவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள், ஒரு கொலையை மற்றொரு கொலையால் தண்டிக்க விரும்பாதவர் அவர் என்றும் கூறியுள்ளார்.

அரசியல் கைதிகள், சிறுபான்மையினர் அல்லது அரசியல் அதிகாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களை ஒழிக்கத் தேடும் சர்வாதிகார ஆட்சிகள் அல்லது தீவிரவாதக் குழுக்கள் மரண தண்டனையைப் பயன்படுத்துகின்றன, மரண தண்டனைகளால் திருஅவை, முதல் நூற்றாண்டுகளைப் போல தற்போதும் புதிய மறைசாட்சிகளால் துன்புறுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

மரண தண்டனையை நிறைவேற்றுவது, நற்செய்தி அறிவிக்கும் பகைவரை அன்புகூருதல் என்ற கோட்பாட்டை மறுப்பதாக உள்ளது என கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தான் கூறியதை மீண்டும் கூறுவதாகவும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

அனைத்துக் கிறிஸ்தவர்களும், நன்மனம் கொண்ட அனைவரும் சட்டமுறையான அல்லது சட்டத்துக்குப் புறம்பேயான மரண தண்டனைகளை ஒழிப்பதற்கு மட்டுமல்லாமல், கைதிகளின் மனித மாண்பு மதிக்கப்பட்டு சிறைகளின் நிலைமையை   மேம்படுத்த உழைப்பதற்கு கடமைப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.