2015-03-18 16:27:00

வன்முறையை வளர்க்கும் மதப் பிரச்சாரத்திற்கு தண்டனை


மார்ச்,18,2015. வன்முறையைத் தூண்டும் வகையில் மதப் பிரச்சாரங்கள் மேற்கொள்வோரை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று ஈராக் நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றினார், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் லூயிஸ் இரபேல் சாக்கோ.

ஈராக் அரசின் மத விவகாரங்கள் பணித்துறை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கையொட்டி, ஈராக் பாராளு மன்றத்தில், பாபிலோன் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இஞ்ஞாயிறன்று இவ்வாறு உரையாற்றினார்.

மக்களை வழிநடத்தும் மதத் தலைவர்கள், பன்முகக் காலாச்சாரம், சகிப்புத்தன்மை, அடிப்படை மனித உரிமை ஆகிய உயர்ந்த விழுமியங்களை தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் தலைவர்களாக விளங்கவேண்டும் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இதற்கிடையே, எகிப்து நாட்டில், சரியான மத உணர்வுகளை வளர்க்கும் வகையில், அந்நாட்டின் கல்வித் திட்டத்தில், மதங்கள் குறித்த பாடங்கள் இடம்பெற வேண்டும் என்று எகிப்து அரசு திட்டமிட்டு வருகிறதென்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

நாட்டில் மதப் புரட்சியொன்று நல்ல முறையில் உருவாகவேண்டும் என்று எகிப்து அரசுத் தலைவர் Abdel Fattah al Sisi அவர்கள் மதத் தலைவர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று Fides செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.