2015-03-18 16:42:00

பெண்களின் நிலை - ஐ.நா. அமர்வில் பேராயர் Auza


மார்ச்,18,2015. பெண்களை சரிநிகர் சமமாகக் கருதி, செயல்படும் அனைவரோடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடத்தின் அனைத்துத் துறைகளைச் சார்ந்தவர்களும் முழுமனதுடன் இணைந்து பணியாற்றுவர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பெண்களின் நிலையை மையப்படுத்தி, மார்ச் 9 முதல், 20 முடிய நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் 59வது அமர்வில் பேசிய, திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernadito Auza அவர்கள், தன் உரையின் இறுதியில் இந்த உறுதியை அளித்தார்.

பல நாடுகளில் பெண்களின் வாழ்வு நிலையும், மாண்பும் பெருமளவு உயர்ந்துள்ளன எனினும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், பாகுபாடுகளும், வன்முறைகளும் குறையவில்லை என்று பேராயர் Auza அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகள், வறுமையுடன் தொடர்புள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Auza அவர்கள், வறுமையை நீக்குவது, பெண்களுக்கும், குடும்பங்களுக்கும் தேவைப்படும் ஓர் அவசர உதவி என்றும் பேராயர் Auza அவர்கள் வலியுறுத்தினார்.

பெண்களை விளிம்புகளுக்குத் தள்ளும் சமுதாயம், பயன்தராத ஒரு சமுதாயம் என்றும், பெண்கள் வாழ்வைச் சுமந்து, அதை அடுத்தவருக்கு வழங்குபவர்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, பேராயர் Auza அவர்கள் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

 ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.