2015-03-18 16:34:00

கத்தோலிக்கரும்,கிறிஸ்தவரும் இணைந்து மேற்கொண்ட அடக்கச்சடங்கு


மார்ச்,18,2015. பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் அமைதியை விரும்புகிறவர்கள், எனவே, ஒப்புரவில் உருவாக்கப்படும் பாகிஸ்தானையே அவர்கள் விரும்புகின்றனர் என்று லாகூர் பேராயர், செபாஸ்டின் ஷா அவர்கள் கூறினார்.

லாகூர் புறநகரில் யூஹனாபாத் (Youhanabad) எனுமிடத்தில், புனித யோவான் கத்தோலிக்கக் கோவிலும், கிறிஸ்துவின் ஆலயம் என்ற கிறிஸ்தவ கோவிலும் தாக்கப்பட்டதில் இறந்தோரின், அடக்கச் சடங்கு புனித யோவான் கோவிலில்  நடைபெற்றபோது, பேராயர் ஷா அவர்கள் இவ்வாறு தன் மறையுரையில் கூறினார்.

10,000த்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கரும், கிறிஸ்தவரும் இணைந்து வந்து மேற்கொண்ட இந்த அடக்கச் சடங்கில், ஏனைய சபைகளின் ஆயர்களும், இஸ்லாமியத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

வன்முறை, ஆக்கப்பூர்வமான தீர்வுகளை என்றும் வழங்காது என்பதை கிறிஸ்தவர்களாகிய நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என்று கூறிய பேராயர் ஷா அவர்கள், பாகிஸ்தானை உண்மையான முன்னேற்றத்தை நோக்கி நடத்திச்செல்ல கிறிஸ்தவர்கள் எப்போதும் உழைப்பர் என்று கூறினார்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.