2015-03-17 15:47:00

சிரியா சிறார் மறக்கப்பட்ட தலைமுறையாக மாறி வரும் ஆபத்து


மார்ச்,17,2015. சிறாரின் நலமான ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சிக்கு சிரியாவிலும் மத்திய கிழக்கிலும் அமைதி நிலவுவது மிகவும் இன்றியமையாதது என்று ஜெனீவா மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் கூறினார் திருப்பீடன் உயர் அதிகாரி ஒருவர்.

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் அவையின் 28வது கூட்டத்தில் சிரியா அரபு குடியரசு குறித்த அனைத்துலக விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு கூறினார். 

போர்களால் சொந்த நாடுகளின்றி வாழும் சிறாருக்கு சட்டமுறையான அடையாளம், இச்சிறாருக்கு கல்வி, குடும்பம் ஆகிய மூன்று கூறுகள் குறித்து வலியுறுத்திப் பேசிய பேராயர் தொமாசி அவர்கள், இலட்சக்கணக்கான சிறாருக்கு சொந்த நாடுகள் என்று எதுவுமில்லை, இவர்களில் ஏறத்தாழ முப்பதாயிரம் சிறார் லெபனானில் மட்டும் உள்ளனர் என்றும் கூறினார்.

சிரியாவிலிருந்து தப்பித்து வந்த பெற்றோருக்குப் பிறந்த சிறாரின் பெயர்கள் எந்த அலுவலகத்திலும் பதிவு செய்யப்படாததால், ஏறக்குறைய 3,500 சிறாருக்கு அதிகாரப்பூர்வமாக குடும்பமோ, வேறுஎந்த அடையாளமோ கிடையாது என்ற யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையையும் சுட்டிக்காட்டினார் பேராயர் தொமாசி.

சிரியாவில் பிரச்சனை தொடங்கியதிலிருந்து ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர், இது உலகளாவிய புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை மேலும் 5 கோடியே 12 இலட்சமாக அதிகரித்துள்ளது உட்பட பல புள்ளி விபரங்களை ஐ.நா.வில் முன்வைத்தார் பேராயர் தொமாசி.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.