2015-03-16 15:48:00

வாரம் ஓர் அலசல் – தன்னலமில்லா வாழ்விலே ஆனந்தம்


மார்ச்,16,2015. பெங்களூரு வேளாண் பல்கலைக்கழக இறுதித் தேர்வில், ஏழை விவசாயி ஒருவரின் மகள் அதிக மதிப்பெண்கள் பெற்று 13 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். ஒரே மாணவி இத்தனை பதக்கங்களைப் பெறுவது இந்தப் பல்கலைக்கழகத்தில் இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் தொட்டப்பள்ளாப்பூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, சிக்கதாயம்மா தம்பதியரின் மூன்று மகள்களில் மூத்த மகள் கீதாதான் இந்தச் சாதனை மாணவி. கடந்த சனிக்கிழமையன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் இந்தப் பதக்கங்களைப் பெற்றுள்ளார் கீதா. இவற்றைப் பெறுவதற்காக மேடையேறிய கீதா, 13 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டு தேம்பி அழுதார். பின்னர் ஒலிவாங்கி அருகே சென்ற கீதா,

“இந்த வெற்றிக்கு என்னுடைய தாய், தந்தையே காரணம். மிகவும் ஏழ்மையான சூழலிலும் என்னை படிக்க வைத்தனர்”

எனப் பெருமிதமாக கூறினார். தனது வெற்றிக்கு பெற்றோரின் உழைப்பே காரணம் என மாணவி கீதா அந்த மேடையில் கண்ணீரோடு கூறிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. 'தி இந்து' நாளிதழிடம் கீதா இவ்வாறு கூறியிருக்கிறார்..

வேளாண் பல்கலைக்கழகத்தின் வாசலை மிதிக்கும் அளவுக்கு எனது குடும்பத்தில் வசதி இல்லை. கல்லூரி கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வு கட்டணம் இன்ன பிற செலவுகள் அனைத்தையும் எனது பெற்றோர் தினமும் கூலி வேலைக்குச் சென்றே செலுத்தினர். 2-ம் ஆண்டு படிக்கும்போது கல்விக் கடன் கிடைத்ததால் ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. எனது பெற்றோரின் கஷ்டத்தையும், வலியையும் நான் நன்கு அறிவேன். என்னையும் எனது தங்கைகளையும் படிக்க வைக்க தினமும் அவர்கள் படும்பாடு எனக்குத் தெரியும். அதனை உணர்ந்து தினமும் பொறுப்பாகப் படித்தேன். அதனால்தான் என்னால் இத்தனை தங்கப் பதக்க‌ங்கள் பெற முடிந்தது. சிறந்த வேளாண் அறிவியலாளர் ஆக வேண்டும் என்பதே எனது இலட்சியம். அதற்காக தினமும் கடுமையாக உழைக்கத் தயாராகி விட்டேன். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் எனக்குத் தெரியும். விவசாயிகளின் வலி அறிவேன். தண்ணீர்ப் பற்றாக்குறை, கடன் பிரச்சனை, உற்பத்திப் பொருட்களுக்கு போதிய விலை இல்லாமை என பல பிரச்சனைகளில் சிக்கி விவசாயிகள் தினமும் மரணத்தோடு போராடுகின்றனர். அதிலும் குறு விவசாயிகளின் பிரச்சனையை வார்த்தைகளில் சொல்லி மாளாது. எனவே எதிர்காலத்தில் ஏழை எளிய விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களது குடும்பத்தின் நலனுக்காகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளேன். விவசாயிகளைக் காப்பாற்றாவிடில் உலகம் ஒருநாள் நிச்ச‌யம் அழிந்துவிடும். விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். பல்வேறு பிரச்சனைகளால் விவசாயிகள் விடுபடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு 13 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி கீதா கூறியிருக்கிறார். இவர்களது குடும்பத்துக்கு ஏறக்குறைய 1 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒன்பதாயிரம் ரூபாய் முதல் பதினோராயிரம் ரூபாய்வரை மட்டுமே வருமானம் கிடைக்கிறது. வறுமையிலும் கஷ்டப்பட்டு தனது மூன்று மகள்களையும் சிறந்த கல்வி நிலையங்களில் படிக்க வைத்து வருகிறார் நரசிம்ம மூர்த்தி. இதற்காக நிலத்தின் மீது கடன் வாங்கியுள்ளார். அன்பு நெஞ்சங்களே, மார்ச் மாதம் பிறந்துவிட்டால் பெற்றோருக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி தேர்வுக் காய்ச்சல் வந்துவிடும். பெற்றோரின் நிலை அறிந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் கீதா போன்ற மாணவ மாணவிகள்தான் இன்றைய சமுதாயத்துக்குத் தேவை. பெற்றோருக்கு உண்மையான மகிழ்வைத் தருவதற்கு இந்நாள்களில் உழைத்துவரும் மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்துவோம்.

அன்பு நெஞ்சங்களே மார்ச் 20, வருகிற வெள்ளி அனைத்துலக மகிழ்ச்சி தினம். மகிழ்ச்சியின் சிறப்பை வலியுறுத்தும் உலக நாள் இது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை 2012ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி இந்த உலக நாளை ஏற்படுத்தியது. உலகெங்கும் மனிதர்கள் வாழ்வில் மகிழ்வும் நல்வாழ்வும் அமைவதை ஓர் உலகளாவிய இலக்காகவும் ஆவலாகவும் அமைய வேண்டுமென்று சொல்லி மார்ச் 20ம் நாளன்று இத்தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும் ஐ.நா. கூறியது. உண்மையான மகிழ்ச்சி என்பது தன்னலத்தை ஒழிப்பதில்தான் இருக்கிறது, உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது என்று சுவாமி விவேகானந்தர் சொன்னார். பொழுதுபோக்கில் ஈடுபட்டுக் கிடைக்கும் மகிழ்வைவிட, சேவையில் ஈடுபடும்போது கிடைப்பதே உண்மையான மகிழ்ச்சி என்றும், அன்பு செலுத்துவதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி வேறில்லை என்றும் காஞ்சிப்பெரியவர் சொன்னார். உண்மையான மகிழ்ச்சி என்பது வெற்றியில் இல்லை. அதைப் பெறுவதற்காக நாம் மேற்கொள்கின்ற கடின உழைப்பிலேயே உள்ளது என்கிறார் பெர்னாட்ஷா.

தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கருணைநிறை பிறரன்புச் சேவையை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இதனால் இரக்கத்தின் ஆண்டு என்ற புதிய ஆண்டு ஒன்றையும் அறிவித்துள்ளார். வருகிற டிசம்பர் 8 முதல் 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதிவரை இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். தன்னலமற்ற கருணைநிறை சேவையிலே உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர் ஆலங்குடி கணேசன் அவர்கள். இவர் கடந்த 44 ஆண்டுகளில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்திருக்கிறார், இதுதவிர, அவசர பிரசவத்திற்கு மற்றும் விபத்தில் அடிபட்டவர்களுக்கு எல்லாம் இலவசமாக வாகன உதவியைச் செய்து வருகிறார். 62 வயதாகும் இவர், ஆலங்குடி கணேசன் என்று சமுதாயத்தில் அறிமுகமாகியிருக்கிறார். சாதாரண சிறிய ஓடுவேயப்பட்ட வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறார். கணேசன் அவர்களுக்கு ஐந்து மகள்கள். நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது. ஐந்தாவது மகள் படித்துக்கொண்டு இருக்கிறார். குடும்பச் சூழ்நிலை காரணமாக எட்டாம் வகுப்பிற்குமேல் படிக்க முடியாததால் பழைய இரும்புகளை வாங்கிவிற்கும் வியாபாரம் செய்வதைப் பழகி இன்றுவரை அதைத்தான் செய்துவருகிறார் கணேசன்.  இவர் தினமலர் தினத்தாளிடம் பகிர்ந்து கொண்டவை இதோ...

42 ஆண்டுகளுக்குமுன், இறந்துபோன தனது கணவரின் பிணத்தை வீட்டிற்கு எடுத்துச்செல்ல வழியில்லாமல் ஒரு பெண் ஆலங்குடி அரசு மருத்துவமனை முன்பாக அழுது கொண்டிருந்தார். அக்காலத்தில் ஊரில் இரண்டே வாடகைக் கார்கள்தான் இருந்தன. பிணத்தை ஏற்றினால் பிறகு வேறு யாரும் அந்தக் காரில் பயணிக்கமாட்டார்கள் என்பதால் வாடகைக் கார்களும் பிணத்தை ஏற்ற வரவில்லை. பிறகு கைவண்டியில் வைத்து அந்தப் பெண் தனது கணவரின் பிணத்தைக் கொண்டு செல்வதை பார்த்தேன். பிணத்தை ஏற்றி செல்வதற்காகவே ஒரு கார் வாங்குவது என்று அந்தக் கணமே முடிவு செய்தேன். கையில் இரும்பு வியாபாரத்திற்கு வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாயை வைத்து பழைய கார் ஒன்றை வாங்கி, நானே ஓட்டப் பழகிக் கொண்டேன். இதனை எனது கடையருகே நிறுத்தி வைத்திருக்கிறேன். அப்போது தொலைபேசி வசதி கிடையாது. மருத்துவமனையிலிருந்தோ காவல்நிலையத்தில் இருந்தோ தகவல் வந்தால் கடை வியாபாரத்தை அப்படியே போட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்று பிணத்தை வாங்கி காரில் ஏற்றிக்கொண்டு சம்பந்தபட்டவர்களின் வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிடுகிறேன். அவர்கள் பார்த்து ஏதாவது டீசல் காசு என்று கொடுத்தால் வாங்கிக்கொள்வேன், இல்லாவிட்டால் திரும்பிவிடுவேன். இதைத்தாண்டி மருத்துவமனையில் இறந்துபோய் கேட்பாரற்று அனாதைப் பிணம் என்ற அடைமொழியோடு கிடக்கும் ஆதரவற்ற பிணத்தை எடுத்துக்கொண்டுபோய் நானே பிணத்தின் உறவாய் மாறி அடக்கம் செய்ய ஆரம்பித்தேன். கடந்த 44 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்திருப்பேன். இதுவரை பல கார்கள் மாற்றிவிட்டாலும் இன்னமும் முதல்முதல் வாங்கிய 515 கார் எண்தான் எனக்கு அடைமொழியாகிவிட்டது. என் வண்டி ஆதரவற்றவர்களுக்காக மட்டும் ஒடிக்கொண்டிருக்கிறது. நான் ஓடும்வரை அதுவும் ஓடிக்கொண்டே இருக்கும்.

515 கணேசன் என்றால் ஆலங்குடியில் தெரியாதவர்கள் யாரும் கிடையாது என்ற நிலைக்கு மக்கள் மனதில் உயரிய இடத்தைப் பிடித்திருக்கிறார் கணேசன். இவரது தன்னலமற்ற சேவைக்குக் கிடைத்த பரிசு இது. மிகவும் மகிழ்ச்சியோடு, ஒருவித ஆத்ம திருப்தியோடு மனிதர் வாழ்ந்து வருகிறார். 'நீ உன் மனசுக்கு பிடிச்சதை செஞ்சுகிட்டே இருய்யா' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்துபவர் எனது மனைவி தெய்வானைதான் என்றும் நெகிழ்ந்து சொல்கிறார் கணேசன்.

அன்பர்களே, உண்மையான மகிழ்ச்சி பற்றி இதற்கு மேலும் நாம் விவரிக்கத் தேவையில்லை. விளம்பரங்களுக்காகச் சேவை செய்பவர்களும் சமுதாயத்தில் உள்ளனர். பத்திரிகைகளில் பெரிய புகைப்படங்களுடன் செய்திகள் வருவதில் இவர்கள் கவனமாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் அந்த மகிழ்ச்சி நிரந்தரமானதாக இருக்காது. அடுத்த வினாடியில் அது மறைந்துவிடும். சுயநலத்தோடு வாழ்பவரை யாரும் மதிப்பதில்லை. அத்தகையவர் விரைவில் சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். ஒருவர் ஒருவருக்கு உதவிசெய்து வாழும்போது வாழ்வு தடையின்றி செல்லும். தன்னலமற்ற சேவை செய்பவர்களிடமே உள்ளார்ந்த மகிழ்வைக் காண முடியும். இவர்கள் தோற்றத்தில் கவர்ச்சியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இவர்கள் உள்ளமோ இறைவன் வாழும் இல்லமாக இருக்கும்.

நீ ஒருவருடைய பாதையில் விளக்கேற்றினால் அது உனது பாதையை ஒளிரச் செய்யும். உனது பணியை இறைச் சேவையாக நினைத்தால் எந்நேரத்திலும் யாருக்கும் உதவி செய்யலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.