2015-03-16 15:36:00

லாகூர் ஆலயங்கள் தாக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் ஆயர்கள் கண்டனம்


மார்ச்,16,2015. பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் பாகிஸ்தான் ஆயர்கள்.

லாகூரின் புறநகர்ப் பகுதியான யௌஹனாபாதிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டது குறித்து, பாகிஸ்தான் ஆயர் பேரவை சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள, அப்பரேவைத் தலைவர் கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், அரசு, அரசியல் கட்சிகள், சமயத் தலைவர்கள் மற்றும் நாட்டின் அனைத்துக் குடிமக்களும், தீவிரவாதச் சக்திகளுக்கு எதிரான நடவடிக்கையில், தங்களின் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடன் பக்கபலமாக நிற்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் ஆலயங்களையும், சிறுபான்மை மதத்தவரையும் பாதுகாப்பதற்கு, பஞ்சாப் அரசும், மத்திய அரசும் சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள் கேட்டுள்ளார்.

அல்கெய்தாவின், ஜமாத் துல் அஹ்ரர் என்ற ஒரு கிளை அமைப்பின் இரு தீவிரவாதிகள் லாகூரின் யௌஹனாபாதிலுள்ள இரு கிறிஸ்தவ ஆலயங்களில் இஞ்ஞாயிற்றுக்கிழமை திருவழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அந்த ஆலயங்களின் முன்பாக நின்று தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில்  குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என்று கருதப்படும் இத்தாக்குதல்கள், லாகூர் நகரில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தானில் மிகப் பெரும்பான்மையாக முஸ்லிம்களே வாழ்ந்துவரும் சூழலில் அங்குள்ள கிறிஸ்தவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவான அளவே உள்ளனர். 

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.