2015-03-16 15:45:00

கிறிஸ்தவர் துன்புறுத்தப்படுவதை மறைக்க உலகம் முயற்சிக்கிறது


மார்ச்,16,2015. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், உலகம் அதனை மறைப்பதற்கு முயற்சிக்கிறது, பாகிஸ்தானில் அமைதி நிலவச் செபிப்போம் என்று இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரைக்குப் பின்னர் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரு ஆலயங்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன், இதில் பலர் இறந்தும் படுகாயமடைந்தும் உள்ளனர், நம் சகோதரர்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக மட்டுமே இரத்தம் சிந்துகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகத் தான் செபிப்பதாக உறுதி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாகிஸ்தானில் அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட, நன்மைகள் அனைத்தின் ஊற்றாகிய ஆண்டவரிடம் இறைஞ்சுகிறேன் என்று கூறினார்.

உலகம் மறைப்பதற்கு முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவது முடிவுக்கு வரப்படுமாறும் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை.

மேலும், கடும் புயலால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள, பசிபிக் பெருங்கடலிலுள்ள Vanuatu தீவு மக்களுடன் தனது ஒருமாப்பாட்டுணர்வைத் தெரிவித்ததோடு அவர்களுக்கு இடர்துடைப்பு உதவிகள் செய்யும் எல்லாருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாகிஸ்தானில் ஒரு கத்தோலிக்க மற்றும் ஒரு பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயங்களுக்கு எதிராக தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 14 பேர் இறந்துள்ளனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.