2015-03-16 16:07:00

இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை விளக்குவது கடினம்


மார்ச்16,2015. நாம் இறைவனால் அன்பு கூரப்பட்டுள்ளவர்கள், எந்த இறையியலாளராலும் இதற்கு விளக்கமளிக்க இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

புதிய விண்ணுலகையும், புதிய மண்ணுலகையும் படைப்பது குறித்த எசாயா இறைவாக்குப் பகுதியை (எச.65,17-21) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, நான் என் மக்களில் மகிழ்ச்சியடைவேன் என்று கூறுவதிலிருந்து அவர் தம் மக்களோடு எவ்வாறு மகிழ்ச்சியடைவது என்பதை நினைத்துப் பார்க்கிறார் என்பதையும், இறைவன் நம்மீது மிகுந்த ஆர்வமாய் இருப்பதையும் காண்கிறோம், என்று கூறினார்            

இறைவனின் இரண்டாவது படைப்பு முதல் படைப்பைவிட மிகவும் வியப்பானது, ஏனெனில் அவர் இயேசு கிறிஸ்துவில் செய்தது போல உலகிலும் செய்கிறார், அவர் அனைத்தையும் புதுப்பித்து தனது அளவற்ற மகிழ்வை வெளிப்படுத்துகிறார் என்று கூறியுள்ளார் திருத்தந்தை .

கடவுள் நம் ஒவ்வொருவரையும் நினைக்கிறார், நம் ஒவ்வொருவர்மீதும் அன்பு கூருகிறார், அவரால் எனது வாழ்வை மாற்ற இயலும், அவர் நிறைய திட்டங்கள் வைத்துள்ளார் என்றும், அவர் நம்மைப் பற்றிக் கனவு காண்கிறார், அவர் நம்மோடு எப்படி மகிழ்ச்சியடைகிறார் என்பதை கனவு காண்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மகிழ்வு வெற்றியடையும் பொருட்டு அவர் நம் இதயங்களைப் புதுப்பிக்க விரும்புகிறார், நம்மை புதுப்படைப்பாக்க விரும்புகிறார் என்றும் கூறிய திருத்தந்தை, கடவுள் என்னைப் பற்றிக் கனவு காண்கிறார் என்பதை நினைத்துப் பார்த்துள்ளோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இயேசு அரச அலுவலர் மகனைக் குணாக்கிய புதுமை பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவன் நம்மீது செலுத்தும் அன்பை விளக்குவது கடினம், ஆனால் நாம் அதை நினைத்துப் பார்த்து அதை உணர்ந்து மகிழ்வால் அழ இயலும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.