2015-03-16 15:16:00

அருள்சகோதரிகளுக்கு எதிரானத் தாக்குதலுக்கு ஆயர்கள் கண்டனம்


மார்ச்,16,2015. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்திலுள்ள Ranaghat நகரில் இயேசு மரி அருள்சகோதரிகள் இல்லத்தில் இடம்பெற்றுள்ள நிகழ்வு குறித்த தங்களின் ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.

கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இக்கன்னியர் இல்லத்தில் எழுபது வயதுக்கு மேற்பட்ட அருள்சகோதரி ஒருவர், குற்றக் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உட்பட அவ்வில்லச் சகோதரிகள் உடலளவில் துன்புறுத்தப்பட்டது மற்றும் அவ்வில்லச் சிற்றாலயத்திலுள்ள திருஅப்பங்கள் இரக்கமற்ற மனிதமற்ற செயல்களால் சேதப்படுத்தப்பட்டது குறித்து அனைத்து இந்திய குடிமக்களும் வெட்கப்பட வேண்டும் என ஆயர்கள் கூறியுள்ளனர்.

இத்தகைய இழிவான செயல்களைக் கடுமையாய்க் கண்டிக்கும் அதேவேளை, இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவருடன் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.

மேலும், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இவ்வன்முறை குறித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு தன்னலமற்ற சேவையாற்றும் துறவற நிறுவனங்களுக்கும், அருள்சகோதரிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுமாறும் கேட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.

மேலும், அருணாச்சல மாநிலத்தின் Miao மறைமாவட்டத்தில் இஞ்ஞாயிறன்று நான்கு நாள் கூட்டத்தை நிறைவு செய்த வடகிழக்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களின் 15 ஆயர்களும் தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இடம்பெறும் கிறிஸ்தவர்க்கு எதிரான தாக்குதல்கள், இன்னும், பெண்களும், அருள்சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாதல் போன்றவற்றுக்கு ஆயர்கள் தங்களின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளி இரவில், Ranaghat நகரில் இயேசு மரி அருள்சகோதரிகள் இல்லத்தில் ஒரு கும்பல் எழுபது வயதுக்கு மேற்பட்ட ஓர் அருள்சகோதரியைப் பாலியல் வன்கொடுமை செய்தது. அங்கிருந்த, 12 இலட்சம் ரூபாயையும் அந்த கும்பல் திருடிச் சென்றுள்ளது.

இதற்கிடையே, இது, பாலியல் வன்கொடுமை செய்வதற்காகவோ, திருட்டுக்காகவோ நடந்த குற்றமல்ல; சிறுபான்மையினர் மீதான தாக்குதலாகவே இதை கருத வேண்டும்' என, கிறிஸ்தவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.