2015-03-14 15:54:00

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் புதிய காந்திஜி சிலை


மார்ச்,14,2015. இலண்டனின் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்திஜியின் வெண்கலச் சிலையொன்று இச்சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியப் பிரதமர் David Cameron, இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் மேற்கு வங்காள ஆளுனரும் காந்திஜியின் பேரனுமாகிய ஸ்ரீ கோபாலகிருஷ்ண காந்தி, இந்திய நடிகர் அமிதாப் பச்சன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றிய பிரித்தானியப் பிரதமர் Cameron அவர்கள், அரசியல் வரலாற்றில் மிக உன்னத நபர்களில் காந்தியும் ஒருவர் எனப் பாராட்டினார்.

காந்திஜி அவர்கள், பிரித்தானியப் பேரரசை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கிய நூறாம் ஆண்டைக் குறிக்கும் விதமாக இவ்வுருவம் திறக்கப்பட்டுள்ளது.

15 இலட்சம் டாலர்களுக்கும் அதிகமாகச் சேர்ந்த நன்கொடையைக் கொண்டு ஒன்பது அடி உயரமுள்ள இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் சிலை அமைக்க நிதி திரட்டிவந்த காந்தி நினைவுச் சிலை அறக்கட்டளையின் தலைவரான லார்ட் மேக்நாத் தேசாய், இந்தச் சிலை அமையப்போகிற இடம் மிகவும் சிறப்புமிக்கது என்றும் காந்தி நேராக நாடாளுமன்றத்தைப் பார்த்தபடி நிற்கப்போகிறார் என்று கூறினார்.

இந்தச் சிலையை உருவாக்கிய சிற்பி Philip Jackson, காந்தி பற்றி நிறைய அறிந்திராதவர்கள் இந்த சிலையைப் பார்த்துவிட்டு அவரைப் பற்றியும், அகிம்சை வழியாக அவர் எட்டிய உயரங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவார்கள் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.