2015-03-14 15:30:00

திருத்தந்தை-பொதுநிலையினர் தங்கள் அழைப்புக்கேற்ப வாழ அழைப்பு


மார்ச்,14,2015. இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் சூழல்களில் சொல்லாலும் செயலாலும்  கிறிஸ்தவ விழுமியங்களுக்குத் தெளிவான சான்றுகளாகத் திகழுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“Seguimi” என்ற மனித-கிறிஸ்தவ முன்னேற்றப் பொதுநிலையினர் குழுவின் ஏறக்குறைய நானூறு உறுப்பினர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழும் இயேசு கிறிஸ்துவே மையம் என்ற இக்குழுவைத் தொடங்கியவர்களின் தனிவரத்தைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இக்குழுவிலுள்ள பொதுநிலையினர் திருஅவையின் பணியில் உயிரூட்டமுடன் முன்னின்று செயல்படுமாறும், தன்னலம் நிறைந்த இவ்வுலகில் கிறிஸ்தவ வாழ்வுக்குச் சாட்சிகளாக வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

1960களில் இத்தாலியின் மோதேனா மற்றும் உரோம் நகரங்களில் முதலில் “Seguimi” குழுவுக்கு வித்திடப்பட்டது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஒளியில், உரையாடலில் கிறிஸ்தவ வாழ்வைச் சிறப்பாக வாழும் ஆர்வத்தில் 1965ம் ஆண்டில் இக்குழு உருவானது. ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் 11 நாடுகளில் 800 பேர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் திருமணமானவர்களும் திருமணமாகாதவர்களும் உள்ளனர்.

மேலும், “இறைவார்த்தைக்குச் செவிமடுப்பது மற்றும் அருளடையாளங்களைக் கொண்டாடுவதன் மூலம் கிறிஸ்துவிடம் மிக நெருக்கமாக நம்மை இட்டுச் செல்லும் காலம் தவக்காலம்” என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.