2015-03-14 15:45:00

சிரியாவின் அமைதிக்காக மார்ச் 15,16 தேதிகளில் நோன்பு,செபம்


மார்ச்,14,2015. சிரியாவில் சண்டை தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவுற்று ஐந்தாவது ஆண்டாகவும் சண்டை தொடரும்வேளை, அந்நாட்டில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், உண்ணாநோன்பு மற்றும் செப நாளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ளார் மெல்கிதே கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்.

தவக்காலம் சிலுவைப்பாதை காலம், அரபு நாடுகளில், குறிப்பாக, சிரியா, ஈராக், பாலஸ்தீனம், லெபனான் ஆகிய நாடுகளில் ஐந்தாவது ஆண்டாக சிலுவைப்பாதை தொடருகின்றது என்று, அந்தியோக்கியாவின் மெல்கிதே கிரேக்க வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை 3ம் கிரகோரியோஸ் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

சிரியாவில் அமைதி ஏற்படுவதற்காக மார்ச் 15,16 தேதிகளில் உண்ணாநோன்பு மற்றும் செபம் கடைப்பிடிக்கப்படுமாறு உலகினர் அனைவரையும் கேட்டுள்ளார் முதுபெரும் தந்தை கிரகோரியோஸ்.

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி தொடங்கிய சண்டையில் 2 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நாற்பது இலட்சத்து மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர் மற்றும் 76 இலட்சம் பேர் சிரியாவிலேயே புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.

சிரியா மக்களில் ஏறக்குறைய பாதிப்பேர் கட்டாயமாக தங்கள் இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.