2015-03-13 14:53:00

துறவறத்தாருக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், கர்தினால்


மார்ச்,13,2015. ஹெய்ட்டி நாட்டில், பாலியல் வன்கொடுமை, திருட்டு, தாக்குதல் என பலவகையான இன்னல்களுக்கு உள்ளாகிவரும் துறவறத்தார் மற்றும் அருள்பணியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு அந்நாட்டு காவல்துறை தவறியுள்ளது என்று ஹெய்ட்டி தலத்திருஅவை குறை கூறியுள்ளது.

ஹெய்ட்டியின் Les Cayes நகர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் இடம்பெற்ற செப வழிபாட்டில் நூற்றுக்கணக்கான துறவறத்தாருக்கு உரையாற்றிய அந்நகர் கர்தினால் Chibly Langlois அவர்கள், காவல்துறையின் மெத்தனப்போக்கை அறிந்த குற்றவாளிகள் தண்டனையிலிருந்து எளிதாக தப்பி விடுகின்றனர் என்று கவலை தெரிவித்தார்.

ஹெய்ட்டியில் பணியில் இருக்கும் காவல்துறை உறுப்பினர்களில் பலர் திறமையற்றவர்களாக உள்ளனர் என்றும், காவல்துறை தனது கடமையை ஆற்றவில்லை என்றும் குறை கூறினார் அந்நாட்டின் முதல் கர்தினால் Langlois.

ஹெய்ட்டி துறவு சபைகள் இம்மாதம் 5ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த அக்டோபரிலிருந்து இதுவரை நாடு முழுவதும் 25 தடவைகள் அருள்சகோதரிகள் மற்றும் குருக்களின் இல்லங்களில் வேற்று மனிதரின் ஆக்ரமிப்புகள் நடந்துள்ளன. இதனால் குறைந்தது 18 துறவு சபைகளும், அலுவலகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிகிறது.

ஹெய்ட்டி, கரீபியன் பகுதியிலுள்ள ஒரு சிறிய தீவு நாடாகும்.   

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.