2015-03-13 14:40:00

கர்தினால் பரோலின் அவர்களின் பெலாருஸ் பயணம்


மார்ச்,13,2015. முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நாடாகிய பெலாருஸில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.  

பெலாருஸில், கடந்த ஏழு ஆண்டுகளில் திருப்பீட உயர்மட்ட பிரதிநிதியாக, சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும் கர்தினால் பரோலின் அவர்கள், ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் கணிக்கப்பட்ட பெலாருஸ் அரசுத்தலைவர் Aleksandr Lukhashenko அவர்களைச் சந்திக்கிறார். 

பெலாருஸ் தலைநகர் Minskல் இஞ்ஞாயிறு வரை இப்பயணத்தை மேற்கொள்கிறார் கர்தினால் பரோலின். 2010ம் ஆண்டில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில்  Lukhashenko அவர்கள், அரசுத்தலைவராக உறுதி செய்யப்பட்டார், அதைத் தொடர்ந்து பல எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். இத்தேர்தலுக்குப் பின்னர் இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளை எதிர்நோக்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெலாருஸ் நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவேண்டுமென்ற அழைப்பை, பெலாருஸ் ஆயர்கள் கர்தினால் பரோலின் அவர்களிடம் வழங்கவிருப்பதாக Minsk பேராயர் Tadeusz Kondrusiewicz அவர்கள் தெரிவித்துள்ளார்.

Minsk நகரில்தான் உக்ரேய்னுக்கும், இரஷ்யாவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.