2015-03-12 15:52:00

திருத்தந்தை: ஒப்புரவு அருளடையாளம், நம்பிக்கை தரும் சந்திப்பு


மார்ச்,12,2015. கத்தோலிக்க அருள் அடையாளங்களில் ஒப்புரவு அருள் அடையாளம் இறைவனின் கனிவுள்ள முகத்தைக் காட்டுவதால், தனிப்பட்ட ஓரிடத்தை பெறுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

திருத்தூது மன்னிப்பை வழங்கும் நீதி அவை, வத்திக்கானில் ஏற்பாடு செய்திருந்த ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த 400க்கும் அதிகமான உறுப்பினர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் மன்னிப்பை வழங்கும் ஒப்புரவு அருள் அடையாளத்தின் மூன்று அம்சங்களை தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஒப்புரவு அருள் அடையாளம், கருணையைச் சொல்லித்தரும் ஒரு வழியாக உணரப்படுதல், இந்த அருள் அடையாளத்தைக் கொண்டாடும் வழிகளைக் கற்றுக் கொள்ளுதல், மற்றும், மறு உலக இயல்பை மையப்படுத்தும் ஒரு கண்ணோட்டத்துடன் இந்த அருள் அடையாளத்தை அணுகுதல் ஆகியவை திருத்தந்தை வலியுறுத்திய மூன்று அம்சங்கள்.

மன்னிப்பு வேண்டி வரும் மனிதரை, கேள்விகளால் சித்திரவதை செய்யும் ஒரு சந்திப்பாக இல்லாமல், நம்பிக்கையையும், மகிழ்வையும் தரும் ஒரு சந்திப்பாக ஒப்புரவு அருள் அடையாளம் அமையவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பல ஆண்டுகள் பாவத்தின் பிடியில் வாழும் மனிதர்கள், இந்த அருள் அடையாளத்தில் கடவுளிடம் முழுவதும் சரண் அடையும் தருணத்தில், அருள் அடையாளத்தை வழங்கும் அருள் பணியாளர், அங்கு நிகழும் ஒப்புரவுப் புதுமைக்கு ஒரு சாட்சியாக மாறவேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஒப்புரவு அருள் அடையாளத்தை வழங்கும் அருள் பணியாளர், இறைவனின் கருணையைக் கொணரும் ஒரு வழி மட்டுமே என்ற மேலான உண்மையை, மறு உலகக் கண்ணோட்டத்தோடு நோக்கும் பக்குவம் பெறவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் மூன்றாம் பகுதியில் கூறினார்.

இறைவனின் கருணையும், நன்மைத் தனமும், உலகின் தீமைகள் அனைத்தையும் இறுதியில் வென்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் அருள் பணியாளர்கள் இந்த அருள் அடையாளத்தை வழங்குவதில் தாராள மனதுடன் பணியாற்ற வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.