2015-03-12 16:21:00

ஈராண்டு பணியில் திருத்தந்தையின் பயணங்கள்


மார்ச்,12,2015. மார்ச் 13, இவ்வெள்ளியன்று தன் தலைமைப் பணியில் ஈராண்டுகளை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைக் குறித்து, வத்திக்கான் வானொலி ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

விளிம்புகளுக்குச் செல்லும் திருஅவை என்ற கருத்தை வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த இரு ஆண்டுகளில் 14 திருத்தூது பயணங்களை மேற்கொண்டுள்ளார்; இவற்றில் ஏழு பயணங்கள் இத்தாலியிலும், 7 பயணங்கள் இத்தாலிக்கு வெளியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் முறையாக உரோம் நகரை விட்டு வெளியே மேற்கொண்ட பயணம், இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள இலாம்பதூசா என்ற தீவுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான படகு பயணங்களை மேற்கொண்டு, பல நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குள் நுழைய விழையும் புலம் பெயர்ந்தோரில் பலர், இலாம்பதூசா தீவை அடைவதற்குள் உயிரிழந்துள்ளனர் என்பதால், அவர்களுக்கென திருத்தந்தை, அத்தீவில் ஆற்றியத் திருப்பலி, அவரது தலைமைப் பணியின் தேர்வுகளைத் தெளிவுபடுத்தியது என்று ஊடகங்கள் இந்தப் பயணத்தை விவரித்தன.

2013ம் ஆண்டு ஜூலை மாதம், ரியோ தெ ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள, திருத்தந்தை மேற்கொண்ட பிரேசில் நாட்டு பயணமே அவர் இத்தாலிக்கு வெளியே மேற்கொண்ட முதல் பயணம்.

இதைத் தொடர்ந்து, புனித பூமி, ஆல்பேனியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு திருத்தந்தை பயணம் சென்றுள்ளார்.

ஆசியாவில் தென் கொரியா, இலங்கை, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் திருத்தந்தை மேற்கொண்ட பயணங்கள், அவர் ஆசிய கண்டத்தின் மீது கொண்டுள்ள தனி அன்பை உணர்த்தியது.

இனி வரும் அண்மைய மாதங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.