2015-03-12 15:43:00

அன்பு கொள்பவர்களா, வெளிவேடக்காரர்களா- திருத்தந்தையின் கேள்வி


மார்ச்,12,2015. நாம் உண்மையிலேயே பிறர் மீது அன்பு கொள்பவர்களா, அல்லது, புனிதர்களைப்போலத் தோன்றும் வெளிவேடக்காரர்களா என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கேள்வி எழுப்பினார்.

தான் வாழும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், இறைவாக்கினர் எரேமியா நூலில் காணப்படும் வார்த்தைகளின் அடிப்படையில் தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.

தான் தேர்ந்துகொண்ட மக்கள் தன்னைவிட்டு விலகி, கடின மனம் கொண்டு வாழ்வதைக் குறித்து, மனம் நொந்து இறைவன் சொல்லும் வார்த்தைகள், நம்மிடமும் கூறப்படுகின்றன என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

பேச்சிழந்த ஒருவரை இயேசு குணமாக்கும் நிகழ்வை, சாத்தானின் செயல் என்று திரித்துக் கூறும் கடின மனதுடையவர்களைப் போல, திருஅவையின் வரலாற்றில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஜோன் ஆப் ஆர்க் (St Joan of Ark) அவர்களின் வாழ்வை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.

இறைவனின் கருணையைச் சுவைக்கும் புனிதர்கள், அதை ஏனையோருக்கும் வழங்கி, துன்புறும் மனிதர்களை நலமாக்குகின்றனர் என்று திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்" என்று இயேசு கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நாம் அன்பு கொண்டவராய் வாழ முடியும், அல்லது, வெளிவேடக்காரராய் வாழமுடியும்; இவற்றிற்கு இடைப்பட்ட மூன்றாம் நிலை இல்லை என்று தன் மறையுரையை நிறைவு செய்தார்.

மேலும், "மிகவும் சுகமான வாழ்வுக்குள் நுழைந்துவிடாமல் கவனமாக இருங்கள்! சுகமான வாழ்வுக்குள் நுழைந்துவிட்டால், மற்ற மனிதர்களை மறப்பது எளிதாகிவிடும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் twitter செய்தியாக இவ்வியாழன் வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.